பள்ளிகள், மருத்துவமனையை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: தெற்கு காசாவிலும் தாக்குதல்
05 Nov,2023
ரபா: காசாவில் மக்கள் தஞ்சமடைந்துள்ள ஐநா பள்ளி மீதும், ஆம்புலன்ஸ் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் நடக்கும் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் கிட்டத்தட்ட ஒருமாதத்தை நெருங்குகிறது. அங்குள்ள கான் யூனிஸ் நகரில் நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குடியிருப்பு வீடு தரைமட்டமானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர்.
வடக்கு காசாவில் சமீபத்தில் ஜமாலியா அகதிகள் முகாம் மீது குண்டுவீசப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அருகில் உள்ள அல்-பகோரா பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர். ஐநா ஆதரவுடன் செயல்படும் இப்பள்ளி மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசின. இதில் 15 பேர் பலியாகினர். இதே போல, ஷபா மருத்துவமனை அருகே ஆம்புலன்சை குறிவைத்து இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9,488 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,900 பேர் குழந்தைகள்.