இஸ்ரேலிய படைகளால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது.
04 Nov,2023
.
இஸ்ரேலிய படையினரால் காசாவின் மேற்கு கரையில் வைத்து இரண்டு பெண்கள் உட்பட 55 பாலஸ்தீனியர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 07 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 2040 ஆக அதிகரித்துள்ளது.
.
"கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் உள்ள நகரங்களில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 55 நபர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கைது செய்துள்ளன" என்று பாலஸ்தீனிய கைதிகள் கிளப் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 கைதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெப்ரோன் கவர்னரேட்டில் உள்ள அல்-பவ்வார் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஒக்டோபர் 7 அன்று காசா மீதான இஸ்ரேலியப் போர் தொடங்கியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு முன், இஸ்ரேலிய காவலில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் 5,200 என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 1,000 க்கும் அதிகமானோர் குற்றச்சாட்டு அல்லது விசாரணை இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.