“காசாவை சூழ்ந்த இஸ்ரேல் ராணுவப் படையை பைகளில் திருப்பி அனுப்புவோம்” - ஹமாஸ் எச்சரிக்கை
03 Nov,2023
டெல் அவில்: காசாவை சூழ்ந்த இஸ்ரேல் ராணுவப் படை வீரர்களை பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ் அட்-டின் அல்-காசம் (Ezzedine Al-Qassam Brigades) எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் போர் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பலமுறை எச்சரிக்கைவிடுத்த போதிலும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவில்லை. அதோடு, போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசா பகுதியை சுற்றிவளைத்து விட்டதாகவும், இனி போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது. இதையொட்டி, காசாவை சூழ்ந்த இஸ்ரேல் ராணுவப் படை வீரர்களை ’பைகளில் திருப்பி அனுப்புவோம்’ என ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ் அட்-டின் அல்-காசம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா போரை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ”ஹமாஸ் பெண்களையும், குழந்தைகளையும் கேடயமாகப் பயன்படுத்துகிறது.தற்போது நடைபெற்று வரும் மோதலில், தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழு உரிமையும் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பும் இஸ்ரேலுக்கு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.