காசா பகுதியில் ஹமாஸ் கட்டமைத்துள்ள பல நூறு கிலோ மீட்டர் சுரங்கங்களை அழிக்க புதிய ஆயுதத்தை இஸ்ரேல் ராணுவம் களமிறக்கி இருக்கிறது. சிலந்தி வலை போல காசா பல பகுதிகளில் வியாபித்திருக்கும் ஹமாஸின் ஆயுத சுரங்கங்களை அழிப்பது சாத்தியமா?
காசா பகுதியில் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே அழிக்க இஸ்ரேல் கண்டுபிடித்த கவசம் தான் iron dome. கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக இஸ்ரேல் ராணுவத்திற்கு ஒரு இரும்புத் திரை போல வானில் செயல்பட்ட iron dome அமைப்பை வல்லரசு நாடுகளே வியந்து பார்த்தன. ஆனால், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி iron dome தொழில்நுட்பமும் எங்களுக்கு தடையல்ல என்று அதிரடித் தாக்குதல் மூலம் ஹமாஸ் குழுவினர் உலகிற்கு அறிவித்தனர். அதாவது வெறும் 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை ஏவியதால், iron dome தொழில்நுட்பம் தோல்வியடைந்தது.
வான்வழி தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய ஹமாஸ் அமைப்பு, கடல் வழியில் தாக்குதல் நடத்துவதற்கு அதன் பிரத்யேக சுரங்க அமைப்புகளைத் தான் பயன்படுத்தியது. வழக்கமாகவே சுரங்கங்களை கட்டமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஹமாஸ், கடல் வழி தாக்குதலுக்கும் சுரங்கங்களை பயன்படுத்தியது இதுவே முதல் முறை என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். காசாவின் பெரும்பாலான கட்டடங்களை வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக்கிய இஸ்ரேல் ராணுவம், தரை வழியாக காசாவிற்கு நுழையத் தயங்கியதற்கும் இந்த சுரங்கங்களே காரணம் என கூறப்படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 80 முதல் 100 மீட்டர் ஆழத்தில், ஹமாஸ் அமைப்பினர் கட்டியுள்ள இந்த சுரங்கங்கள், பல நவீன வசதிகளை உள்ளடக்கி உள்ளன.
சுரங்கம் என்றால் தவழ்ந்து செல்வது போன்று இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள நவீன சுரங்கங்கள் அனைத்தும் 6 அடி உயரம், 2 அடி அகலமும் கொண்டதாக இருக்கின்றன. மழைநீர், வெப்பம் ஊடுருவ முடியாத அளவிற்கு RC கான்கிரீட் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. சுரங்கத்தின் உள்ளே தகவல் தொழில்நுட்ப சேவைக்கு உதவும் வகையில் வயர்களும் உள்ளன. இதுமட்டுமின்றி பல சுரங்கங்களில் ஆயுத தளவாடங்களை விரைவாக கொண்டு செல்ல ஏதுவாக ரயில் தண்டவாளம் போன்ற அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு காசாவில், ஹமாஸ் உடன் நடந்த மோதலின் போது இஸ்ரேல் ராணுவம் 32 சுரங்கங்களை குண்டு வைத்து அழித்தது. ஆயுதங்களை பதுக்கி வைக்கவும், ஹமாஸ் குழுவினர் மறைந்து கொள்ளவும் இந்த சுரங்கங்களே கை கொடுத்து வந்திருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நிலத்திற்கு அடியில் ஒரு சுரங்க உலகையே ஹமாஸ் உருவாக்கி வைத்திருக்கிறது. வயல் வெளியில் இருக்கும் எலி வளை போல், ஹமாஸ் உருவாக்கி வைத்திருக்கும் இந்த பாதாள உலகம் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகவும் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருவேளை சுரங்கங்கள் இருக்கும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்தாலும் கூட, வான் வழி தாக்குதல் மூலம் அதனை அழிப்பதும் சவாலானதாகவே இருக்கிறது. காரணம், தரைக்கு அடியில் 80 மீட்டர் ஆழத்திற்கு குடைந்து சென்று தாக்கும் வகையிலான ஆயுதங்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் இல்லை. ஆனால், இந்த பிரச்னைக்கு புதிய தீர்வை கண்டுபிடித்திருக்கிறது இஸ்ரேல். ஆம், சுரங்கங்களை முழுமையாக அழிப்பதற்கு பதில் அந்த சுரங்கத்தின் வாயில்களை கண்டறிந்து திறக்க முடியாத அளவிற்கு மூடி விட்டால், ஹமாஸ் அமைப்பிற்கு அது எந்த வகையிலும் பலனளிக்காது என்பது தான் இஸ்ரேலின் வியூகம்.
இதற்காகவே, Sponge bomb என்ற புதிய வகை குண்டுகளை இஸ்ரேல் தயாரித்து வைத்துள்ளது. அதாவது இரண்டு வகை கெமிக்கல் திரவங்களை கொண்டு உருவாக்கியுள்ள இந்த குண்டுகளை, ஹமாஸ் சுரங்கத்தின் வாயில்களில் இருந்து உள்ளே வீசும் போது அது வெடித்து, புதிய காங்கிரீட் உருண்டையை உருவாக்கி, சுரங்கத்தை அடைத்து விடும். ஆனால், இஸ்ரேல் ராணுவத்திற்கு ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்துவதில் சிக்கல் இல்லாமல் இல்லை. ஏனென்றால், இஸ்ரேலில் இருந்து பிடித்துச் சென்ற பிணையக் கைதிகளில் பலரை சுரங்கங்களில் தான் ஹமாஸ் குழுவினர் அடைத்து வைத்துள்ளனர். எனவே அவர்களை வெளியேற்ற வழி கிடைக்காமல், ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்துவது இஸ்ரேல் ராணுவத்திற்கு சவாலான காரியம் தான்.