ஜப்பானிடமிருந்து கடல் உணவுகளை வாங்கும் அமெரிக்கா!
30 Oct,2023
புகுஷிமா விவகாரத்தில் ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதியை சீனா தடை செய்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பானிடமிருந்து கடல் உணவுகளை வாங்கி குவித்து வருகிறது.
ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு சுனாமி தாக்கியதில், புகுஷிமா அணு உலை கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக அங்கிருந்த கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனிடையே உலையில் இருந்த தண்ணீரை சுத்திகரித்து, பசிபிக் பெருங்கடலில் விட ஜப்பான் முடிவு செய்தது. ஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்தது.
இதனால், ஜப்பானின் மீனவர்கள் மற்றும் கடல் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில், ஜப்பானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும், சீனாவுடனான பொருளாதார மோதலின் ஒரு பகுதியாகவும், ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படும் கடல் உணவுகளை அமெரிக்கா பெருமளவில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு மெட்ரிக் டன் கடல் உணவுகளை அமெரிக்க ராணுவத்திற்காக கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ராஹம் இம்மானுவேல், சீனாவின் பொருளாதார போர்களுக்கு எதிராக பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவிடும் வகையிலான முன்னெடுப்பு இது என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தூதர்கள் நாடுகளுக்கு இடையே நட்புறவை உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர, ஒரு நாடுகளுக்கு இடையே பகை உருவாக்கும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.