வாஷிங்டன்: இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டில் ‘பெல்ட் அன்ட் ரோடு' திட்டத்தை சீனா தொடங்கியது. இதன்படி மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் 154 நாடுகள் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் ‘பெல்ட் அன்ட் ரோடு' பொருளாதார வழித்தடம், ரஷ்யாவின் பெட்ரோலிய பொருட்கள், இயற்கை எரிவாயு வர்த்தகத்துக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியா, மத்தியகிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் (ஐஎம்இசி) கடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்தியாவின் மும்பையில் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் வழியாக கிரீஸ் நாட்டுக்கு புதிய பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் சமரச முயற்சி காரணமாக முஸ்லிம் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இஸ்ரேல் உடனான பகைமையை மறந்து ஐஎம்இசி பொருளாதார வழித்தட திட்டத்தில் இணைந்துள்ளன. இந்த பொருளாதார வழித்தட திட்டத்தை சீர்குலைக்கவே ஈரான், சீனா,ரஷ்யா இணைந்து ஹமாஸ் தீவிரவாதிகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்ததிட்டத்தை சீர்குலைக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தி உள்ளனர். இது எனது தீர்க்கமான கணிப்பு. இதற்கு ஆதாரங்களை அளிக்க முடியாது. இது எனது உள்ளுணர்வு கணிப்பு. யார் சதி செய்தாலும் எங்களது பொருளாதார வழித்தடதிட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
தென்சீனக் கடலில் சீனா தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தலையிடும். பிலிப்பைன்ஸை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தால் பல்வேறு நாடுகள் கடன் சுமையால் சிக்கித் தவிக்கின்றன. சீன அரசின் இந்த பொருளாதார வழித்தட திட்டத்துக்கு போட்டியாக அமெரிக்காவும் ஜி7 நாடுகளும் களத்தில் இறங்கும். இவ்வாறு பைடன் தெரிவித்தார்.
ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இஸ்ரேல்
இஸ்ரேலின் தெற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிபுட்ஸ் பேரி பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்துவதற்கு நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகளை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் புதிய வீடியோவை இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
அதில் ஹமாஸ் தீவிரவாதிகள் காரில் செல்கின்றனர். அவர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். இதில் டிரைவர் நிலைகுலைந்ததால், அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதுகிறது. பின்னர் அந்த காரில் இருந்து தப்பியோட முயற்சிக்கும் தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொல்கின்றனர். அதன்பின் இஸ்ரேல் ராணுவத்தினர் கிபுட்ஸ் பேரி மக்களை மீட்கின்றனர். இதற்கிடையே காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தவும், பீரங்கி வாகனங்களுடன் இஸ்ரேல் வீரர்கள் தயாராகி வருகின்றனர். இஸ்ரேல் பீரங்கி படையினர், காசாவில் ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.