வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயோன போர் தீவிரமடையும்பட்சத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்கு அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் தயாராகி வருகிறது.
அமெரிக்க உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ராணுவ ஆலோசகர்களின் உதவியுடன் இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தரைவழியாக தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
ஹமாஸ் தீவிரவாதிகள் அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலிய எல்லைக்குள் புகுந்து 1,400 பேரை கொடூரமாக கொலை செய்ததையடுத்து போர் நடவடிக்கையை இஸ்ரேலிய அரசு தீவிரமாக்கியுள்ளது.
இந்த போரால் பாதிக்கப்படும் காசா மக்களுக்கு ஆதரவாக ஈரான், லெபனான் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த ஆதரவு குரல் அரபு நாடுகள் மத்தியில் இன்னும் விரிவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெபானானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக எல்லைப் பகுதிகளில் இருந்து ஹிஸ்புல் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஈரானிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அந்த அமைப்பு இஸ்ரேலை வடக்கிலிருந்து தாக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனானில் முறையே 6 லட்சம் மற்றும் 86,000 அமெரிக்கர்கள் வசிப்பதாக வெளியுறவுத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இஸ்ரேல்-காசா போர் தீவிரமடைந்து அண்டை நாடுகளுக்கும் பரவும் நிலையில் அது மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அமெரிக்காவை கவலையடையச் செய்துள்ளது.
போர் தீவிரமடையும் பட்சத்தில் அமெரிக்கர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையிலான நிர்வாகம் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
அதேசமயம், இஸ்ரேல் மற்றும் லெபனானில் வசிக்கும் அமெரிக்கர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் என்பதுடன், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்த விவகாரத்தில் ஒரு சில அதிகாரிகள் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இக்கட்டான சூழ்நிலையில் செயல்படுத்துவதற்கு எந்த திட்டமும் இல்லாமல் இருப்பதும் பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்ற வாதமும் எழுந்துள்ளது.
காசா மக்களுக்கு ஆதரவாக அரபு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் பரவிக் கொண்டிருப்பதால் அது அமெரிக்க பணியாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆகிய இருதரப்புக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டே அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிபர் ஜோ பிடன் தலைமையிலான நிர்வாகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இவ்வாறு வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.