இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் நிற்கிறது. இந்த சூழலில் பாலஸ்தீனத்தின் பக்கம் சீனா, ரஷ்யா, அரபுநாடுகள் உள்ளிட்ட 10 நாடுகள் கைகோத்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தற்போது உச்சத்தில் உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதலில் பல்வேறு உலக நாடுகள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளன. போர் நாளுக்கு நாள் கைமீறி சென்று கொண்டு இருக்கிறது. இந்த போரில் இஸ்ரேல் சொந்த கையில் சூடு போட்டுக்கொண்டது என்றுதான் கூற வேண்டும். இஸ்ரேல் போரின் ஒரு பகுதியாக காசாவில் அல் அக்லி என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர். உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலைசெய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
இதனால் இஸ்ரேலுக்கு எதிராகவே உலக நாடுகள் திரும்ப தொடங்கி உள்ளன. இஸ்ரேலை ஆதரித்து வந்த அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் கூட இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட வகையில் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் , இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இன்னொரு பக்கம் பாலஸ்தீனத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. பாலஸ்தீனத்திற்கான மக்கள் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. பாலஸ்தீனத்திற்கு தொடக்கத்தில் ஆதரவு அளிக்காத நாடுகள் கூட இப்போது ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளன,
இஸ்ரேலின் இந்த தாக்குதல் மிக தவறானது. மனித தன்மையற்றது. இஸ்ரேலை உலக நாடுகள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் செய்தது மிகப்பெரிய கொடுமை என்று சவுதி தெரிவித்துள்ளது. பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது. சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோக்க முடிவு செய்துள்ளன.
சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது. எனவே சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் லெபனான், சிரியா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்து வருகிறது.
இந்த போரில் லெபனான், சிரியா, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, எகிப்து, ரஷ்யா, சீனா, வடகொரியா, அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் பாலஸ்தீனத்தை நேரடியாக ஆதரிக்கின்றன. இந்தியா இந்த போரில் இரண்டு பக்கமும் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.