காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை; வீடியோ ஆதாரங்கள் உள்ளன
19 Oct,2023
வாஷிங்டன்: காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பளர் ஆட்ரின் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அரசு செய்த ஆய்வின்படி காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாகாது என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் கிடைத்த செய்திகள், உளவுத்துறை அறிக்கைகள், ஏவுகணையின் செயல்பாடு, புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் இதனை உறுதி செய்துள்ளோம்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசா மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்கள் தவறுதலாக விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது. இஸ்ரேலுக்கு வந்து அந்நாட்டு அதிபர், பிரதமரை சந்தித்து ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர்
ஜோ பைடனும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் காசா மருத்துவமனை தாக்குதலுக்கும் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். தரை வழியாகவும் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதுடன், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து வடக்கு காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,400 பேரும் காசா பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்