அணு ஆயுத பரிசோதனைகளுக்கு இஸ்ரேல் இடையூறு செய்ததாக ஈரான் புகார்; ஹமாஸ் தாக்குதலுக்கும் ஈரானுக்கு தொடர்பா? நீடிக்கும் குழப்பம்... உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஹமாஸ் தாக்குதலை பாராட்டிய ஈரான்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாடு என்ன? இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவளிக்குமா?
அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 7 ஆயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி அதிரடித் தாக்குதலை நடத்தியது ஹமாஸ் ஆயுதக் குழு.உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தை, ஈரான் கொண்டாடியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதிலும் ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையிலேயே இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான வெளிப்படையான மோதல் பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. வல்லரசு நாடாக வேண்டும் என்ற தங்களின் நோக்கத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுத பரிசோதனைகளுக்கு இஸ்ரேல் இடையூறு செய்வதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், வளைகுடா பகுதியில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான கப்பல்கள் மீது ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஈரான் தாக்குவதாக அமெரிக்கா பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்கும் நோக்கில் தான் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் ஆதரவு அளித்ததாக ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது.ஆனால், ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என ஈரான் தலைவர் Ayatollah Ali Khamenei தெளிவுபடுத்தி உள்ளார். ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை தாங்கள் பாராட்டியதற்கு காரணம், உளவுத்துறையில் ஜாம்பவானாக கருதப்படும் இஸ்ரேலிற்கு தெரியாமல், இந்தத் தாக்குதலை ஹமாஸ் நிகழ்த்தியதுதான் என அவர் விளக்கமளித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துகளை முன்வைத்த ஈரான் தலைவர் Ayatollah, அப்போது பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்ட தலைப்பாகையைத் தான் அணிந்திருந்தார். இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தி வரும் தாக்குதலில் சில அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். எனவே, இஸ்ரேலுடன் இணைந்து ஹமாசுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இஸ்ரேலிற்கு நேரடியாக ஆயுத உதவியையும், தங்களின் வலிமையான போர்க் கப்பல்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஆனால், ஹமாஸ் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இதுவரை அமெரிக்காவும் வழங்கவில்லை. அந்த வகையில் பார்த்தால், இஸ்ரேல் நடத்தி வரும் ஹமாசுக்கு எதிரான போரில், அமெரிக்கா நேரடியாக பங்கேற்க வாய்ப்பில்லை என்றே சர்வதேச விவகாரங்களை அறிந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.