மோசமான எதிரி ஹமாஸ் அவசர கால அமைச்சரவையை உருவாக்கிய இஸ்ரேல் பிரதமர்!!
12 Oct,2023
ஜெருசலேம் : ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிரான போரை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர கால அமைச்சரவையை உருவாக்கி உள்ளார். காசா முனையில் இருந்து செயல்படும் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய கொடூர தாக்குதல்களில் 2000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது இஸ்ரேலிய வரலாற்றில் மிக கொடிய தீவிரவாத தாக்குதல்களாகும். இதையடுத்து காசா பகுதிகளில் வான்வழியே குண்டு மழையை பொழிந்த இஸ்ரேல் படையினர், ஹமாஸுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் எந்த நேரத்திலும் தரைவழி படையெடுப்பை தொடங்கலாம் என்ற நிலையில், எல்லையில் ஆயிரக்கணக்கான துடுப்புகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத் துறை தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை கொண்ட அவசர கால அமைச்சரவையை இஸ்ரேல் அமைத்துள்ளது. இது குறித்து பேசிய அவர், “நாங்கள் ஒரு தேசிய அவசரகால அரசாங்கத்தை நிறுவியுள்ளோம். இஸ்ரேல் மக்கள் ஒன்றுபட்டுள்ளனர். அரசும் அவர்களுடன் ஒன்றுபட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-ஐ விட மோசமான ஒரு கொடூரமான எதிரியுடன் நாங்கள் போராடுகிறோம். பெண்கள் மற்றும் சிறுவர்கள் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். ஆண்களும் பெண்களும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர், “என்றார்.இதனிடையே ஹமாஸ் என்ற இயக்கத்தை பூமியில் இருந்தே துடைப்போம், அந்த இயக்கம் முற்றிலும் களை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.