பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கிய சவுதி அரேபியா. பதற்றத்தில் இஸ்ரேல்!
10 Oct,2023
சவுதி அரேபியாவின் இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடனான தொலைபேசி அழைப்பின் போது பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்கு சவுதி அரேபியாவின் அசைக்க முடியாத ஆதரவு எப்போதும் இருக்கும் என்று உறுதிப்படுத்தி உள்ளார். மத்திய கிழக்கு அரசியலில் இது மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அப்பாஸிடம் பேசுகையில் பாலஸ்தீன மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கான அவர்களின் நியாயமான உரிமைகளை அடைவதற்கும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை, தேவைகளை அடைவதற்கும், நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கும் அவர்களுடன் தொடர்ந்து சவுதி அரேபியா உடன் நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
இதில் தற்போது மறைமுகமாக சவுதி - ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட உள்ளது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது. சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.
இதனால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்வதில் சவுதிக்கு பெரிய நெருக்கடி உள்ளது. இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் நடக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஹமாஸ் இயக்கத்திற்கு ரகசியமாக உதவி செய்வதே ஈரான்தான் என்ற புகாரும் உள்ளது. அதன்படி ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுதங்கள், உளவு தகவல்கள், இந்த மோதலுக்கு திட்டம் போட்டு கொடுத்ததே ஈரான்தான் என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைக்கிறது. மொத்தத்தில் இந்த மோதல் மத்திய கிழக்கு உலக நாடுகளின் மோதலாக உருவெடுத்து உள்ளது. இஸ்ரேல் எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகவும், இஸ்ரேல் வரலாற்றில் அந்த நாடு எதிர்கொண்ட போர் அல்லாத பெரிய தாக்குதலாகவும் இந்த ஹமாஸ் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பழி வாங்கியே தீருவோம். ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம். காசா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த போர் தற்போது உச்சத்தை தொட்டு உள்ளது. சிறிய தாக்குதல் கொண்ட போராக இல்லாமல் மிக நீண்ட போராக இது இருக்க போகிறது என்று கூறப்படுகிறது.