பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ரஷ்யா செல்லவுள்ளதாகத் தகவல்
10 Oct,2023
இஸ்ரேல் போரின் திடீர் திருப்பமாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ரஷ்யா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று காலை யாருமே எதிர்பாராத வகையில் திடீரென பாலஸ்தீன ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
இருபதே நிமிடங்களில் சரமாரியாக 5000 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பித்தது, ஹமாஸின் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
இதனால் இரு பகுதிகளிலும் அங்கே பெரும் பரபரப்பு நிலையே நிலவி வந்த நிலையில், காசா பகுதியினை இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
இப்படி பதற்ற நிலை தொடரும் நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் திடீரென ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்ல உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவுக்கான பாலஸ்தீன தூதுவரே இந்தத் தகவலைக் கூறியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"பாலஸ்தீன அதிபர் ரஷ்யா வரவுள்ளார், இருப்பினும், இந்தப் பயணம் எப்போது என்பது குறித்து ரஷ்யத் தரப்பில் இருந்து இதுவரையில் உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் இன்னமும் வெளிவராமல் இருக்கிறது, அதிபர் மஹ்மூத் அப்பாஸின் இந்த பயணத்தில் இந்தப் போர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது" என இந்த தகவல் குறித்து பாலஸ்தீன தூதுதர் அப்துல் ஹபீஸ் நோஃபல் தகவல் வழங்கியுள்ளார்.
உணவுகளுக்கும் கட்டுப்பாடு
மேலும், இரு தரப்பும் தினசரி தொடர்பிலேயே இருப்பதாகவும் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்தும் தகவல் பரிமாற்றங்கள் நடந்தே வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காசா பகுதியை இஸ்ரேல் ராணுவப் படைகள் முற்றுகையிட்டிருப்பதால் அங்கே எரிபொருள், தண்ணீர் மற்றும் உணவுகளுக்கும் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் பாலஸ்தீன அதிபர் ரஷ்யா செல்லவுள்ள விடயம் இந்த போரின் திருப்புமுனையாக கருதப்படுகிறது.