கனடா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமெரிக்கா திடீர் வலியுறுத்தல்
30 Sep,2023
வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நிஜார் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின் போது கேள்வி எழுப்புவார் என்று அமெரிக்கா தனக்கு உத்தரவாதம் அளித்திருப்பதாக ட்ரூடோ கூறியிருந்தார்.
இந்நிலையில், மோன்ட்ரியாலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரூடோ, \\”இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், முக்கியமான புவிசார் அரசியல் சக்தியாகவும் உள்ளது. கடந்தாண்டு இந்தோ-பசிபிக் கூட்டு கொள்கையை வெளியிட்ட நிலையில், இந்தியா உடன் நெருக்கமான உறவை வளர்ப்பதில் கனடா மிகவும் தீவிரமாக உள்ளது,\\” என்று தெரிவித்தார்.
நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது,” என்று தெரிவித்தார். பின்னர் ஹட்சன் கல்வி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் ஜெய்சங்கரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அமெரிக்கா அதனுடைய கருத்தை பகிர்ந்து கொண்டது. நானும் இந்தியாவின் கவலைகள் குறித்து விளக்கினேன். இரு நாடுகளும் நல்ல தகவல்களுடன் விரைவில் வெளிவருவோம்,” என்று கூறினார்.