கூகுள் மேப்பால் பறிபோன உயிர்.. வழக்கு தொடர்ந்த பெண்!
26 Sep,2023
கூகுளின் வழிகாட்டுதலின்படி மேம்பாலத்தில் பயணம் செய்தவர் அந்த மேம்பாலம் இடிந்துள்ளது என்பதை அறியாமல் அங்கு சென்று கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நம்மில் அனைவருமே கூகுள் நிறுவனத்தின் ஏதாவது ஒரு சேவையையாவது கண்டிப்பாக பயன்படுத்தி இருப்போம். நமது அன்றாட வாழ்வை எளிமையாக்க உதவுவதுடன் பெரும் அளவில் நேரத்தை சேமிக்கவும் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் நமக்கு அறிமுகம் இல்லாத இடங்களுக்கு பயணம் செய்யும்போது கூகுளின் கூகுள் மேப்ஸ் செயலியானது வழியை காண்பித்து நமக்கு உதவுகிறது. ஆனால் சில சமயங்களில் கூகுள் காண்பிக்கும் வழி கரடு முரடானதாகவும், சில சமயங்களில் வழியே இல்லாமலும் கூட இருக்கும். அப்படிப்பட்டதொரு துரதிஷ்டமான சம்பவம் தான் கடந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு நடந்துள்ளது.
கூகுள் மேப்பை பயன்படுத்தி தனது வாகனத்தை மேம்பாலத்தின் மேல் செலுத்திய மனிதர் ஒருவர், கூகுளின் தவறாக வழிகாட்டுதலினால் உயிரிழந்துள்ளார். தற்போது அவரின் குடும்பத்தார் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவை சேர்ந்த பிலிப் ஆக்சன் என்பவர் கூகுள் மேப்பை பயன்படுத்தி தன்னுடைய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்னர் அமெரிக்க கடற்படையிலும் வேலை பார்த்துள்ளார்.
இவர் பயணத்தை துவங்கிய அன்று இரவு கடுமையான மழை பொழிந்துள்ளது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய மகளின் ஒன்பதாவது பிறந்தநாளை தன்னுடைய நண்பரின் வீட்டில் கொண்டாடுவதற்காக கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுடன் பயணத்தை துவங்கியுள்ளார்.
அவர் செல்லும் வழியில் மேம்பாலம் ஒன்று இருந்துள்ளது. கூகுளின் வழிகாட்டுதலின்படி மேம்பாலத்தில் பயணம் செய்தவர் அந்த மேம்பாலம் இடிந்துள்ளது என்பதை அறியாமல் அங்கு சென்று கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கூகுள் மேப்பில் ஏற்பட்ட காண்பிக்கப்பட்ட தவறான வழியே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேம்பாலம் இடிந்துள்ளதை கூகுள் சரியாக காண்பித்து இருந்தால் அவர் வேறு ஒரு வழியில் சென்றிருப்பார்.
இதனை அடுத்து அவரின் குடும்பத்தினர் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர். 2020 ஆம் ஆண்டிலிருந்து அந்த பாலம் சேதுமடைந்துள்ளதாகவும், பல்வேறு யூசர்கள் கூகுளிடம் இதைப் பற்றிய தகவலை தெரிவித்தும் கூகுள் நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
குறிப்பாக “சஜ்ஜஸ்ட் எடிட்” ஆப்ஷன் மூலம் பல்வேறு யூசர்கள் அந்தப் பாலம் இடிந்துள்ளதை அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் இந்த விஷயத்தை ஆராய்ந்து வருவதாக கூகுளிடம் இருந்து செய்தி வந்துள்ளது ஆனாலும் அந்நிறுவனம் தன்னுடைய சேவையில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ததாக தெரியவில்லை.
பிலிப் உயிரிழந்த பிறகும் கூட அவரது குடும்பத்தினர் மீண்டும் ஒருமுறை கூகுளிடம் அந்த உடைந்துள்ள பாலத்தை பற்றியும் வழியை மாற்றும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் அவர் உயிரிழந்து ஆறு மாதம் ஆகியும் கூட அந்நிறுவனம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.
இதைப் பற்றி பேசிய கூகுளின் செய்தி தொடர்பாளர் பேக்சன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை அவர் தெரிவித்துள்ளார். “மிகவும் துல்லியமான வழிகாட்டுதலை தருவதே கூகுள் மேப்ஸில் முக்கிய நோக்கம் ஆகும். இந்த வழக்கு பற்றிய விவரங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.