AI புதிய வேலைகளை உருவாக்கும் என சொல்வது முட்டாள்தனம்! வேலையிழப்பு மோசமாக இருக்குமாம்!
09 Oct,2025
இந்த உலகில் இப்போது ஏஐ வளர்ச்சி படுவேகமாக நடந்து வருகிறது. ஏஐ துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதற்கிடையே ஏஐ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்ற கருத்து பொய்யானது என்றும் ஏஐ காரணமாக அதிகப்படியானோர் வேலையிழப்பார்கள் என்றும் கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் மாஜி தலைவர் மோ காவ்தாத் எச்சரித்துள்ளார்.
உலகெங்கும் இப்போது செயற்கை நுண்ணறிவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து ஏஐ துறையில் ஏற்படும் வளர்ச்சி பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு பக்கம் ஏஐ மனித வாழ்க்கைக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறது. அதேநேரம் மற்றொரு பக்கம் ஏஐ காரணமாக வேலைவாய்ப்புகள் மிக மோசமாக இருக்கும் எனப் பலரும் எச்சரித்து வருகிறார்கள்.
ஏஐ வேலைவாய்ப்புகளை உருவாக்காது
இதற்கிடையே கூகுள் எக்ஸ் என்ற நிறுவனத்தின் வணிகத் தலைவராக இருந்த மோ காவ்தாத் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது செயற்கை நுண்ணறிவு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்ற கருத்து "முழுவதும் தவறானது" என்றும் ஏஐ அமைப்புகளால் உயர்மட்ட அதிகாரிகளும் கூட தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆட்குறைப்பு
பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காவ்தாத், "செயற்கை பொது நுண்ணறிவு (AGI) இறுதியில் மனிதர்களை விட அனைத்து விஷயங்களிலும் மேம்பட்டதாகவே இருக்கும். ஒரு சிஇஓ-ஐ விட கூட சிறந்த நபராக ஏஐ இருக்கும். நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறேன். இப்போது எனது சொந்த AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஏஐ-க்கு முன்பு எனது நிறுவனத்திற்கு 350 டெவலப்பர்கள் தேவைப்படுவார்கள். ஆனால், இப்போது மூன்று பேர் மட்டுமே போதுமானதாக உள்ளனர்.
அதிக சம்பளம் பெறுவோர் கூட மிகப் பெரிய வேலை இழப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள். AI வேலைகளை உருவாக்கும் என்று சொல்வோரின் கருத்துகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏஐ வேலைகளை அழிக்கவே செய்யும் என்பது எனது கருத்து. ஆட்டோமேஷனால் பாதிக்கப்படாது என்று முன்பு நாம் நினைத்த துறைகள் கூட ஏஐ வளர்ச்சியால் ஆபத்தில் இருக்கிறது.
எல்லாருக்கும் ஆபத்துதான்
ஏஐ இப்போது எல்லா வேலைகளையும் செய்வதால் தலைமை பதவியில் இருப்போர் ஊழியர்களை நீக்கி, உற்பத்தித்திறன் மற்றும் செலவுகளைக் குறைக்க முடியும் என்பதற்காக இதைக் கொண்டாடுகிறார்கள்.. அவர்கள் யோசிக்காத ஒரே விஷயம், AI அவர்களையும் மாற்றும் என்பதுதான். ஏஐ செய்ய முடியாத வேலை குறைவு. இதனால் அனைவரும் ஆபத்தில் தான் உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். இப்போது உலகின் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ நோக்கி நகர்ந்து வருகின்றன. ஏஐ பயன்பாடுகளை அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் காவ்தாத்தின் வார்னிங் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
இருவேறு கருத்துகள்
ஏஐ காரணமாக எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து வல்லுநர்களின் கருத்து இரு வேறாகவே இருக்கிறது. காவ்தாத் இதுபோல எச்சரித்தாலும் பிற வல்லுநர்கள் வேறு விதமாகவே சொல்கிறார்கள்.. மார்க் கியூபன் மற்றும் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட வல்லுநர்கள், AI திறன்களைக் கற்றுக்கொள்வதுடன் சாப்ட்வேர் திறன்களை வலுப்படுத்துவது தொழிலாளர்களுக்கு நன்மை தரும் எனச் சொல்லியுள்ளனர்.