இந்தியாவில் உள்ள ஐபோன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை சொந்த ஊருக்கு வருமாறு ஃபாக்ஸ்கான் தொழில்நுட்பக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் ஐபோன் உற்பத்தியின் தரம் பாதிக்காது என்றும் கூறியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோள் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவின் அழுத்தத்தை ஆப்பிள் நிறுவனம் எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் தயாரிப்பாளர் இந்தியாவில் அதன் உற்பத்தி கூட்டாளர்களுடன் இணைந்து புதிய ஐபோன் 17-ன் உற்பத்தியை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியாவில் ஒரு புதிய ஐபோன் ஆலையைக் கட்டும் பணியில் ஃபாக்ஸ்கான் ஈடுபட்டுள்ளதாகவும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
தென்னிந்தியாவில் உள்ள ஐபோன் ஆலைகளில் பணியாற்றும் ஃபாக்ஸ்கானின் பெரும்பாலான சீன ஊழியர்கள் ஊருக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்தாலும், இந்த நடவடிக்கை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 300 சீன தொழிலாளர்கள் வெளியேறிவிட்டதாகவும், பெரும்பாலும் தைவானிய ஊழியர்கள் தான் இந்தியாவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் சீன அரசாங்கம், ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் உபகரண ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துமாறு கூறியிருந்தது. பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை வேறு இடங்களுக்கு மாற்றுவதைக் கண்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சீனா, அதைத் தடுக்க முயற்சிக்கிறது.
இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் கவர்ச்சிகரமான மாற்றுகளாக இருப்பதால், அரிய கணிம வளங்கள் ஏற்றுமதி முதல் உற்பத்தித் திறன் கொண்ட திறமையாளர்களை வெளியே அனுப்புவது வரை தனது பிடியை இறுக்கி வருகிறது சீனா.
ண்டுகளுக்கு முன்புதான் பெருமளவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கிய இந்தியா, இப்போது ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி, இந்திய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஃபாக்ஸ்கானால் நியமிக்கப்பட்ட சீன மேலாளர்களையே நம்பியுள்ளது.
அமெரிக்க நுகர்வோருக்கான ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று வாதிடும் டிரம்ப், ஆப்பிளின் இந்தியத் திட்டங்களையும் குறிவைத்துள்ளார். ஆனால் அமெரிக்காவில் தொழிலாளர் செலவுகள் அதிகமாக இருப்பதாலும், சீனா தனது பொறியாளர்கள் வெளிநாடுகளில் செயல்பாடுகளை அமைக்க உதவ அனுமதிக்க விரும்பாததாலும், அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்வது சாத்தியமில்லை.
ஃபாக்ஸ்கான் சீனாவில் பெரும்பாலான ஐபோன்களைத் தொடர்ந்து தயாரித்து வந்தாலும், அதன் இந்திய விரிவாக்கம் ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தித் துறையில் முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்.