இந்தக் காலத்தில் எங்குப் பார்த்தாலும் ஏஐ தான் இருந்து வருகிறது. ஏஐ மூலம் நமது மனித வாழ்க்கையே மெல்ல மாறி வருகிறது என்றே சொல்லலாம். ஏஐ பல்வேறு துறைகளிலும் மிகப் பெரியளவில் பலன் கொடுத்து வருகிறது. இதற்கிடையே கிரீஸ் நாட்டில் அப்படியொரு வினோதமான சம்பவம் தான் நடந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஏஐ என்பது அறிவியலின் உச்சம் என்றே சொல்லலாம். அறிவியல் ரீதியாக அது நமக்குத் துல்லியமாகப் பதில்களைத் தரும். ஆனால், இங்கே கிரீஸ் நாட்டில் பெண் ஒருவர் மூட நம்பிக்கையையும் ஏஐ டூலையும் சேர்த்துள்ளார். இதனால் அவர் விவாகரத்து கோரியும் விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பான செய்தியை அங்கு வெளியாகும் கிரீஸ் சிட்டி டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
டேசியோகிராஃபி என்ற ஒரு முறை இருக்கிறது. அதாவது ஒரு டீ, காபி உள்ளிட்ட உணவுகளை எந்தளவுக்கு எப்படி மீதம் வைக்கிறார் என்பதைப் பொறுத்து அவரது எதிர்காலத்தைக் கணிப்பதே இந்த முறையாகும். இதற்கு அறிவியல்பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. இருப்பினும், அந்தப் பெண் பல காலமாகவே இதையெல்லாம் நம்பி வந்துள்ளார். இதனால் தனது கணவர் மீதம் வைத்த காபி கோப்பைகளை போட்டோவாக எடுத்து சாட்ஜிபிடியிடம் கேட்டுள்ளார்.
ஏஐ சொன்ன வார்த்தை
அதற்கு அதற்கு சாட்ஜிபிடி சொன்ன பதிலே விவகாரத்திற்கு வழிவகுத்ததாக கிரீக் சிட்டி டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதாவது இந்தப் பெண் அனுப்பிய போட்டோக்களை ஆய்வு செய்த சாட்ஜிபிடி, அவரது கணவர் வேறு ஒரு இளம்பெண்ணுடன் கள்ள உறவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி அந்தப் பெண்ணின் பெயர் கூட 'E' என்ற எழுத்தில் தொடங்கும் எனக் கூறியுள்ளது. சாட்ஜிபிடி இந்தளவுக்கு உறுதியாகச் சொன்னதால் அந்தப் பெண் அதை நம்பிவிட்டார்.
திருமணமாகி 12 ஆண்டுகளுக்கும் மேலாகி அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் கூட உள்ளன. இருப்பினும், சாட்ஜிபிடி சொன்னதால் தனது கணவர் துரோகம் செய்துவிட்டதாகவே அந்த பெண் கருதியிருக்கிறார். அதுபோல எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கணவர் மறுத்த போதும் அதைக் கேட்காமல் விவாகரத்திற்கும் விண்ணப்பித்துள்ளார்.
புலம்பும் கணவர்
இருப்பினும், தனக்கு எந்தவொரு பெண் உடனும் தொடர்பு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அவரது கணவர்.. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனது மனைவி முதலில் இதைச் சொன்ன போது, நான் விளையாட்டாகச் சொல்கிறார் என்று நினைத்து சிரித்தேன். இருப்பினும், எனது மனைவி அதை ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொண்டார்.
சில நாட்களில் என்ன வீட்டை விட்டும் வெளியேறச் சொன்னார். என்னிடம் மேற்கொண்டு எதுவும் பேசவும் இல்லை. திடீரென எங்கள் குழந்தைகளிடமும் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று சொல்லிவிட்டார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. பிறகு திடீரென ஒரு வழக்கறிஞரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதுதான் இது தற்காலிகம் இல்லை.. அவர் இதை எவ்வளவு சீரியஸாக எடுத்துள்ளார் என்பது புரிந்தது" என்றார். மேலும், பரஸ்பர விவகாரத்திற்கும் அந்தப் பெண் ஒப்புக்கொள்ளவில்லையாம். குழந்தைகளை வளர்க்கும் உரிமையும் தனக்கு வேண்டும் எனச் சேர்த்து விவாகரத்திற்குக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பாவப்பட்ட கணவர் மேலும் கூறுகையில், "தனது மனைவி இதுபோல மாய மந்திரங்களை நம்புவது இது முதல்முறை இல்லை. ஒரு முறை இப்படித் தான் ஜோதிடர் ஒருவரிடம் சென்று ஏதோ கேட்டார். அவர் சொன்னதையே ஒரு ஆண்டுக்கு மேல் நினைத்துக் கொண்டிருந்தார்" என்றும் தெரிவித்தார்.
கணவரின் வழக்கறிஞர் இது குறித்துக் கூறுகையில், "நீதிமன்றத்தில் ஏஐ எல்லாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, இவர் மீதான குற்றச்சாட்டுகள் இப்போது நிரூபிக்கப்படவில்லை, அவை வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரை அவர் எந்தவொரு குற்றமும் செய்யாதவராகவே கருதப்படுவார்" என்றார்.