2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், ஆசிரியர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!
22 Apr,2025
2035 ஆம் ஆண்டுக்குள் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவையில்லை என்றும், அதனை ஏஐ தொழில்நுட்பம் கவனித்துக் கொள்ளும் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, 2035 ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு பல துறைகளை ஆக்கிரமித்து விடும் என்றும், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் முற்றிலும் தேவைப்பட மாட்டார்கள் என்று கூறினார்.
இனி சிறந்த மருத்துவ ஆலோசனையும், சிறந்த கல்வியும் ஏஐ டெக்னாலஜி மூலம் இலவசமாக அல்லது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், டாக்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்றும் கூறினார். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ டெக்னாலஜி சிறந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் வகையில் மேம்படும் என்று அவர் நம்புகிறார்.
அத்துடன், ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த கல்வி இலவசமாக கிடைக்கும் என்றும், அவர் தனது நம்பிக்கையை பதிவு செய்தார். ஆனால் அதே நேரத்தில், தொழிற்சாலைகள், கட்டிட வேலை, ஹோட்டல் துறை, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும், வேலை இழப்பு வந்தாலும் வறுமை ஏற்படாது என்றும் பில் கேட்ஸ் கூறினார்.
குறைந்த நேர வேலை மற்றும் அதிக சம்பளம், மன நிம்மதி, அதிக ஓய்வு கிடைக்கும் என்றும், மனித குலத்துக்கு ஏஐ ஒரு வரப்பிரசாதமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அனைத்து வேலைகளையும் மாற்றிவிட முடியாது என்றும், மனோதத்துவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட சில தொழில்களை மாற்ற முடியாது என்றும் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.