" உள்ளங்கையில் உலக கம்ப்யூட்டர்களின் பவர்!இனி இதுதான்!
21 Feb,2025
இந்த நவீனக் காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக நாம் படுவேகமாக முன்னேறி வருகிறோம். இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாகக் கடவுள் சிப் என்று அழைக்கப்படும் சிப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்த பேச்சு இருக்கிறது. அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏஐ துறையில் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரம் தொழில்நுட்பம் என்பது ஏஐ உடன் மட்டும் சுருங்கிவிடுவதில்லை. அதைத் தாண்டியும் பல்வேறு துறைகள் உள்ளன. அது குறித்த ஆய்வுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது குவாண்டம் கம்ப்யூட்டிங். நீண்ட காலமாகவே குவாண்டம் கம்ப்யூட்டிங் சார்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. குவாண்டம் கம்ப்யூட்டிங் இதற்கிடையே குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்
வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக குவாண்டம் சிப் மஜோரானா 1 என்ற புதிய சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிசக்திவாய்ந்த இந்த பிராசசரை கடவுள் சிப் என்றும் கூட அழைக்கிறார்கள். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளைப் பயன்படுத்தி இந்த சிப்பை உருவாக்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. டோபோலொஜிக்கல் கோர் (topological core) அடிப்படையில் உருவாக்கப்பட்ட உளகின் முதல் குவாண்டம் பிராசஸிங் யூனிட் இதுவாகும்.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா தனது ட்விட்டரில், "நமக்குத் திடப் பொருட்கள், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று வகையான பொருட்கள் மட்டுமே இதுவரை தெரியும். ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.. புதிய வகைப் பொருட்களான டோபோகண்டக்டர்கள் குவாண்டம் கம்யூடிங் முறைக்குப் பெரியளவில் கைகொடுக்கிறது. இது தற்போதைய மாடல்களை விட வேகமாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும்" என பதிவிட்டுள்ளார். கட்டுப்பாடுகள் குவாண்டம் கம்ப்யூட்டிங் குறித்த பேச்சு பல காலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், அதில் பல சிக்கல்கள் உள்ளன. முதலில் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கு பயன்படும் குவிட்ஸ் மிகவும் நிலையற்றதாக இருக்கும்.. அவை முறையாகச் செயல்பட கிட்டதட்ட ஜீரோ டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். இது தவிரப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அப்படி இருந்தாலும் கூட தவறுகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகவே இருக்கிறது
இந்த சிக்கல்களைச் சரி செய்யவே மைக்ரோசாப்ட் இதைக் கண்டுபிடித்துள்ளது. டோபோகண்டக்டர்களை அடிப்படையாகக் கொண்ட குவிட்கள் நிலையாக இருக்கும். இது அவற்றை அதிக துல்லியத்துடன் செயல்பட அனுமதிக்கிறது. மைக்ரோசாப்ட் சொல்வது என்ன இது தொடர்பாக மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குவாண்டம் கம்ப்யூட்டர்கள் நமது வாழ்க்கையை மாற்றி அமைக்கும். அது பல வகைகளில் நமக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். அவை மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்களை உடைக்கும். கட்டுமானம், உற்பத்தி அல்லது சுகாதாரம் எனப் பல துறைகளில் பேருதவியாக இருக்கும்"
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா கம்ப்யூட்டர்களையும் விஞ்சும் குவாண்டம் கம்ப்யூட்டிங் அதன் முழு திறனை அடைய ஆய்வாளர்கள் ஒரே சிப்பில் குறைந்தது ஒரு மில்லியன் குவிட்கள் அமைக்க வேண்டும். அதற்கு முதல் படியாக மைக்ரோசாப்ட் மஜோரானா 1 இருக்கும். சத்யா நாதெல்லா மேலும் கூறுகையில், "டோபோகண்டக்டர்கள் மூலம் உருவாக்கப்பட்ட குவிட்கள் வேகமானவை.. அவை ஒரு மில்லிமீட்டரில் 1/100 என்ற சைஸில் உள்ளது. இதன் மூலம் ஒரு சிப்பில் ஈஸியாக ஒரு மில்லியன் குவிட்களை வைக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார். எல்லாம் திட்டமிட்டபடி குவாண்டம் கம்ப்யூட்டிங் வெற்றிகரமாக இருந்தால் அது தற்போது உலகில் உள்ள அனைத்து கணினிகளையும் விஞ்சும் அளவுக்குச் சக்திவாய்ந்ததாக இருக்கும். இது அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இது உதவும்.