ஜெர்மனி, ஜப்பான் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது!
12 Feb,2025
சீனாவின் BYD கார் நிறுவனம் ADAS தொழில்நுட்பத்தை இலவசமாக தரப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் அடுத்த 10 வருடத்தில் உலகச்சந்தையில் சீனா கார்கள் மட்டும்தான் இருக்கும். ஜப்பானிய ஜெர்மன் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு காலத்தில் நோக்கியா போன் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் ஆன்ட்ராய்டு வந்த பின்னர் Samsungதான் கெத்தாக இருந்தது. இப்போது Oppo, OnePlus, Vivo உள்ளிட்ட சீன மொபைல்கள் சந்தையை ஆக்கிரமித்து இருக்கின்றன. அதேபோல இப்போது ஆட்டோமொபைல் துறையை சீனா ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.
ADAS தொழில்நுட்பம் என்றால் என்ன?: கார் ஓட்டுவதை மேலும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தைதான் Advanced Driver Assistance Systems-ADAS என்று கூறுவார்கள். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்கவும், பார்க்கிங்கை எளிதாக்கவும் முடியும். 1. Automatic Emergency Braking (AEB) 2. Lane Keep Assist (LKA) 3. Adaptive Cruise Control (ACC) 4. Blind Spot Monitoring (BSM) இந்த 4 பாதுகாப்பு அம்சத்தை ADAS கொண்டிருக்கும். நீங்கள் காரை ஆட்டோ டிரைவ் (Auto Drive) மோடில் போட்டுவிட்டு கண் அயர்ந்து தூங்குகிறீர்கள் எனில், காரின் குறுக்கே மாடு வந்துவிட்டால், கார் தானாக பிரேக் அடித்து நின்றுவிடும். இதனை Automatic Emergency Braking (AEB) என்று கூறுகிறார்கள்.
அதேபோல சாலையை விட்டு காரை விலகாமல் வைத்திருக்க LKA டெக்னாலஜி பயன்படுகிறது. ACC என்பது, மற்றொரு வாகனத்திற்கும், உங்கள் வாகனத்திற்கும் இடையே பாதுகாப்பான தொலைவை மெயின்டெயின் செய்கிறது. BSM, பார்வை திறன் குறைவாக உள்ள இடத்தில் டிரைவரை அலர்ட் செய்ய பயன்படுகிறது.
அதிரடியாக குறையப்போகும் கார்களின் விலை: இவ்வளவு டெக்னாலஜியை கொண்டிருக்கும் கார்களின் குறைந்தபட்ச விலை ரூ.60 லட்சம். எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்தான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வரை ADAS டெக்னாலஜிக்கு பெயர் பெற்றதாக இருந்தது. ஆனால் இப்போது, சீன கார் நிறுவமான BYD, இந்த டெக்னாலஜி கொண்ட Seagull மாடல் கார்களை வெறும் ரூ.8.6 லட்சத்திற்கு விற்க முன்வந்திருக்கிறது. அதாவது சாதாரண கார்களில் ADAS டெக்னாலஜியை இலவசமாக தருவதாக BYD அறிவித்திருக்கிறது. எனவே, மார்கெட்டில் மற்ற கார்களின் விற்பனை கடுமையாக சரியும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜெர்மன் மற்றும் ஜப்பான் தயாரிப்பு கார்களின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்று ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.
அடிவாங்கும் ஆட்டோமொபைல் மார்க்கெட் BYD நிறுவனத்தின் அறிவிப்பால் சீனாவின் பிரபல கார் நிறுவனங்களான Xpeng மற்றும் Geely Auto ஆகியவற்றின் பங்குகள் தலா 9.2% மற்றும் 11.4% குறைந்திருக்கின்றன. மறுபுறம் BYD நிறுவனத்தின் பங்குகள் 4.5% அதிகரித்துள்ளன. Xpeng மற்றும் Geely Auto-ன் பங்குகள் இந்த அளவுக்கு குறைவது இதுவே முதல் முறை என்று ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். முதலில் சக சீன நிறுவனத்தை காலி செய்யும் BYD, பின்னர் மற்ற நிறுவனங்களையும் காலி செய்துவிடும் என்றும் எச்சரிக்கின்றனர். இது ஒருவகையில் நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல விஷயம்தான். பணக்காரர்கள் மட்டுமே ஆட்டோ டிரைவ் கார்களை வாங்கும் சூழல் இனி மாறி, நடுத்தர குடும்பங்களாலும் இனி இந்த வகை காரை வாங்க முடியும்.