டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!
17 Nov,2024
விஞ்ஞான ரீதியாக அடுத்தடுத்து பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வரும் எலான் மஸ்க் அடுத்து நாடுகளுக்கிடையே மக்கள் பயணிக்கும் ராக்கெட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக அளவில் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் பல நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் அவ்வபோது நம்ப முடியாத வகையில் சில விஷயங்களை சாத்தியப்படுத்துவதற்கான செயல்திட்டங்களிலும் ஈடுபடுகிறார்.
இவரது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் மைக்ரோசிப் பொருத்தி அதன்மூலம் மின்சாதனங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆராய்ச்சியை செய்து வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஆராய்ச்சியில் உள்ளது.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த என்ஜீனியர் அலெக்ஸ் என்பவர் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் மற்ற நாடுகளுக்கும் பயணிப்பதற்கான அனுமதி கிடைக்கும் என்றும், ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் மூலம் உலகின் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானங்களை விட விரைவாக செல்லலாம் என்றும் அவர் பேசியுள்ளார்.
இதற்கான செயல்திட்டங்கள் எலான் மஸ்க்கிற்கு உள்ளதாக கூறியுள்ள அவர், வேல் திரைப்படத்தில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 10 நிமிடத்தில் வந்ததற்கு சூர்யா சொல்லும் கணக்கை போல, எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கு ராக்கெட் மூலம் எவ்வளவு நேரத்தில் செல்லலாம் என்று ஒரு புள்ளி விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ செல்ல 15 மணி நேரம் ஆகும். ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் மூலம் வெறும் 40 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு எலான் மஸ்க்கும் ‘இது இப்போது சாத்தியம்’ என பதில் அளித்துள்ளார்.