எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை!
14 Nov,2024
பிரிட்டனின் கவுரவமிக்க பத்திரிகைகளில் ‘தி கார்டியன்’ முக்கியமானது. 1821 ஆம் ஆண்டு ‘தி மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் இந்த பத்திரிகை மான்செஸ்டர் நகரில் தொடங்கப்பட்டது. பின்னர், ‘தி கார்டியன்’ என்ற பெயருடன் லண்டனுக்கு மாறியது. தற்போது, தலைமையகம் லண்டனில் உள்ளது.
நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேல் இந்த பத்திரிகை விற்பனையாகிறது. ‘தி அப்சர்வர் ‘ என்ற பத்திரிகையும் இந்த குழுமத்துக்கு சொந்தமானதுதான்.
இந்த நிலையில், தி கார்டியன் பத்திரிகை எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. தீவிர வலது சாரிகளுக்கு ஆதரவாகவும் இனவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களும் எக்ஸ் பக்கத்தில் பகிரப்படுவதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.
‘இனிமேல், தங்களது செய்திகள் எதுவும் எக்ஸ் பக்கத்தில் பகிரப்படாது . அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருந்ததால் மட்டுமே இவ்வளவு நாள் காத்து கொண்டிருந்தோம். எக்ஸ் பக்கம் நச்சு செய்திகளை பரப்பும் ஒரு தளம் ஆகும். அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது அரசியல் கருத்துக்களை பரப்பும் ஒரு களமாக அதை மாற்றி கொண்டிருக்கிறார்’ என்று கார்டியன் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், வாசகர்கள் நேரடியாக தங்கள் ஆன்லைன் தளத்தில் வந்து செய்திகளை வாசிக்கும்படியும் தி கார்டியன் கேட்டுக் கொண்டுள்ளது. அதே வேளையில், வாசகர்கள் தங்கள் கட்டுரைகள், செய்திகளை பகிர எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
கார்டியன் வெளியேறினாலும் அதன் ஊழியர்கள் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் செயல்பட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. செய்திகளை சேகரிக்கும் நோக்கத்தில் அந்த பத்திரிகையின் செய்தியாளர்கள் எக்ஸ் பக்கத்தில் செயல்படுவார்கள்.
தி கார்டியன் எடுத்த இந்த முடிவு குறித்து எலான் மஸ்க் பொருத்தமற்றது என கருத்து தெரிவித்துள்ளார்.
தி கார்டியன் பத்திரிகையை 1 கோடியே 8 லட்சம் பேர் ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.