பிரான்ஸ் நிறுவனமான சிட்ரோயன் (Citroen) எமி (Ami) என பெயரிடப்பட்ட சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள குட்டி காரை அறிமுகம் செய்துள்ளது. இருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த காரின் விலை 8,000 யூரோ.
பறக்கும் கார், இரண்டாக உடையும் கார் என இப்படி பல்வேறு காட்சிகளை இன்று உண்மையாக்கி வருகிறார்கள் கார் உற்பத்தியாளர்கள். பலருக்கு சாதாரண போக்குவரத்து வாகனம், சிலருக்கு ஆடம்பரத்தின் அடையாளம். இந்த வகையில் கார் பிரியர்களை ஈர்க்கும் வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்படும் கார் கண்காட்சி உலகப் புகழ் பெற்றது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, சீனா, ஜப்பான், கொரியா நாடுகளைச் சேர்ந்த கார் நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுப்பிடிப்புகளை இங்கு காட்சிப்படுத்துகின்றன. 90வது முறையாக நடைபெறும் இக்கண்காட்சியில் ஆடி, பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, கியா, குவாய், பெஜோட், ரெனால்டு, ஸ்கோடா, டெஸ்லா, ஃபோல்ஸ்வேகன் என உலகம் முழுவதும் உள்ள கார் நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, விதவிதமான கார்களை அறிமுகம் செய்துள்ளன.
இதில் ஜப்பானைச் சேர்ந்த THK கார் நிறுவனத்தின் LSR-05 என்ற கார் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. மக்களிடையே மின்சார கார்கள் அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில், வயர்களே இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதியை இந்த கார் கொண்டுள்ளது. இதன்மூலம் பேட்டரியின் அளவு குறைந்து, காரின் இடவசதி அதிகரிக்கிறது. இதனால், சாய்ந்து தூங்கும் வகையிலான சீட்-களும் இடம்பெற்றுள்ளன.
எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Cybertruck சரக்கு வாகனத்தின் ஸ்டீயரிங், வழக்கமான வட்டவடிவில் இல்லாமல் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்த சரக்கு வாகனம், விரைவில் ஐரோப்பிய சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதேபோல பிரான்ஸ் நிறுவனமான சிட்ரோயன் (Citroen) எமி (Ami) என பெயரிடப்பட்ட சுமார் இரண்டரை மீட்டர் நீளமுள்ள குட்டி காரை அறிமுகம் செய்துள்ளது. இருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த காரின் விலை 8 ஆயிரம் யூரோ. நம்ம ஊர் விலை சுமார் ஏழேகால் லட்சம். அதிகபட்சம் 45 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டக் கூடிய இந்த காரை 14 வயது நிறைவடைந்த சிறுவர்களும் 8 மணி நேர பயிற்சிக்குப் பிறகு ஓட்டலாம்.
பிரான்ஸ் நிறுவனமான பெஜோட் இளைஞர்களை கவரும் வகையில் சதுர வடிவிலான ஸ்டீயரிங் கொண்ட பிரம்மாண்ட காரை அறிமுகம் செய்துள்ளது. வீடியோ கோம் கண்ட்ரோலர் போன்று உள்ள ஸ்டீயரிங்கள், இன்றைய இளையதலைமுறையினரை ஈர்க்கும் என நம்புகிறகு பெஜோட். 2026ல் இந்த கார்களின் உற்பத்தி தொடங்குகிறது. இளைஞர்கள், சிறுவர்களை ஈர்க்க ஐரோப்பிய நிறுவனங்கள் முயற்சிக்கும் நிலையில், எங்களது கார் தண்ணீரில் அரை மணி நேரம் மிதக்கும் என்கிறது சீனாவின் BYD நிறுவனம்.
இதேபோல இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள டிரோன் மூலம், திக்குதெரியாத இடங்களில் உள்ள சாலைகளையும் அறிந்து கொள்ளலாம். கார் சந்தையை கைப்பற்ற ஐரோப்பிய மற்றும் சீன நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், பாரிஸ் கார் கண்காட்சியில் விதவிதமான கார்கள் அணிவகுத்துள்ளன.