2035-க்குள் நிலவில் அணுமின் நிலையம்; ரஷ்யாவுடன் திட்டத்தில் இணையும் இந்தியா, சீனா?
12 Sep,2024
ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தியாவும், சீனாவும் இணைய ஆர்வம் காட்டுவதாக ரஷ்யாவின் EurAsian Times தெரிவித்துள்ளது.
ரஷ்யா 0.5 மெகாவாட் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட, ஒரு சிறிய அணுமின் நிலையத்தை நிலாவில் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் இணைய இந்தியாவும், சீனாவும் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் 2035 க்குள் அணுமின் நிலையம் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் அரசு அணுமின் நிறுவனமான Rosatom-த்தின் தலைவர் அலெக்ஸி லிக்காச்சேவ், விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசியதாவது;
“0.5 மெகாவாட் ஆற்றல் திறன் கொண்ட அணுமின் நிலையத்தை நிலவில் அமைக்கவுள்ளோம். இந்த திட்டத்தில் சர்வதேச நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நமது சீனா மற்றும் இந்திய நண்பர்கள், இதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பல சர்வதேச திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்க முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
2040ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் சுகன்யா திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க திட்டத்திலும் இந்தியா
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வீரர் சுபான்சு சுக்லாவை அனுப்பவுள்ளதாக இஸ்ரோ கடந்த மாதம் அறிவித்திருந்தது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட சபான்சு சுக்லா, முன்னதாகவே, நாசாவின் உதவியுடன் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவுள்ளார்.