வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் தகவல்: இணையம் இல்லாமல் பைல்களை அனுப்பும் வசதி அறிமுகம்!
30 Jul,2024
இணைய வசதி இல்லாமல் ஒரு செல்போனில் இருந்து மற்றொரு செல்போனிற்கு பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுவர உள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான செல்போன் பயனர்களின் வரவேற்பை வாட்ஸ் அப் செயலி பெற்றுள்ளது. விரைவாக செய்திகள், பைல்கள் ஆகியவற்றை அனுப்ப வாட்ஸ் அப் செயலி உதவி புரிகிறது. மேலும் குறைவான இணைய வசதியை மட்டுமே பயன்படுத்துவதால் இந்த செய்தி பரிமாற்ற செயலிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில் வாய்ஸ் கால்கள், வீடியோ கால்கள் ஆகியவற்றுடன் கான்ஃபரன்ஸ் கால்களையும் மேற்கொள்ள முடியும்.
அவ்வப்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அம்சமாக இணைய வசதி இல்லாத போதும், மிகப்பெரிய அளவிலான பைல்களை விரைவாக அனுப்பும் வசதியை கொண்டு வர வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாட்ஸ் அப் பீட்டா எனப்படும் இந்த வெர்ஷனில், தற்போது இந்த புதிய அம்சத்தை பரீட்சார்த்த முறையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எண்ட் டு எண்ட் என்க்கிரிப்டட் செய்யப்பட்ட இணைப்பை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் அருகில் உள்ளவர்களுடன் போட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்களை இந்த முறையில் பகிரலாம்.
இணைய வசதி இல்லாத போதும், இரண்டு ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு இடையே இந்த வசதியை பயன்படுத்த முடியும். தற்போதைக்கு பரீட்சார்த்த முறையில் இந்த அம்சம் சோதனை செய்து பார்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது அனைத்து வாட்ஸ் அப் பயனாளர்களுக்கும் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்தும் அனுப்புநர், வாட்ஸ் அப்பில் கியூ ஆர் கோட் ஒன்றை உருவாக்க வேண்டும். பின்னர் பெறுநர் அதை ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது இரு செல்போன்களும் இணைக்கப்படும். இதன் பிறகு பயனர்கள் ஒருவருக்கொருவர் இந்த பைல்களை ஷேர் செய்து கொள்ள முடியும். இந்த புதிய அம்சத்தை ஆப்பிள் செல்போன்களிலும் கொண்டு வர வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.