எந்திர நாய் முதுகில் தானியங்கி துப்பாக்கி..... சீன ராணுவத்தின் அறிமுகம்
29 May,2024
கம்போடியா தேசத்துடனான கூட்டு ராணுவப் பயிற்சியில், தானியங்கி துப்பாக்கியால் சுடும் ரோபோ நாயை அறிமுகம் செய்து உலக நாடுகளை சீனா அதிர வைத்துள்ளது.
கம்போடியாவுடன் நடைபெற்று வரும் கூட்டு ராணுவப் பயிற்சியின் போது, முதுகில் தானியங்கி துப்பாக்கி பொருத்தப்பட்ட ரோபோ நாயை சீனா காட்சிப்படுத்தி உள்ளது. போருக்குத் தயார் நிலையில் இருக்கும் ரோபோ நாயின் வீடியோவை, சீனாவின் சிசிடிவி செய்தி நிறுவனம் வெளியுலகுக்கு பகிர்ந்துள்ளது.
இந்த ராணுவப் பயிற்சியின் போது, போர்க்களங்களில் உதவக்கூடிய சரக்கு ட்ரோன்கள் மற்றும் உளவு ட்ரோன்கள் உள்ளிட்ட அறிவார்ந்த ஆளில்லா எந்திரங்களையும் சீனா காட்சிப்படுத்தியது. கோல்டன் டிராகன் 2024 என்ற தலைப்பிலான இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் மேலும் பல புதுமையான ஆளில்லா தாக்குதல் உபாயத்துடனான உபகரணங்களை சீனா அறிமுகம் செய்துள்ளது.
ரிமோட் மூலம் இயக்கப்படும் ரோபோ நாய் நடப்பது, துள்ளுவது, படுப்பது மற்றும் பின்னோக்கி நகர்வது, துப்பாக்கியால் பாய்ந்து சுடுவது போன்றவற்றை மிரட்டலாக சாதிக்கின்றன. இந்த ரோபோ நாய் 15 கிலோகிராம் எடையுள்ளதாகவும், நான்கு பரிமாண வைட் ஆங்கிள் உணர்தல் அமைப்புடன் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்களங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு பணிகளில், மனித உயிர்களின் இழப்புகள் மற்றும் சேதங்களை தவிர்க்கவும், எத்தகைய தட்பவெப்ப சூழலிலும் இரவு பகல் பாராது உழைக்கவும் இந்த எந்திர நாய்கள் உதவுவதோடு, அவசியமெனில் நேரடித் தாக்குதலில் இறங்கவும் இவை தயங்காது. பேட்டரிகள் மற்றும் இதர ஒருங்கிணைப்பு சாதனங்களை அடிவயிற்றில் கொண்டிருக்கும் ரோபோ நாய் தொடர்ந்தார் போன்று 2 முதல் 4 மணி நேரம் செயல்படக் கூடியவை.
தற்போது நடைபெற்று வரும் சீனா-கம்போடியா கோல்டன் டிராகன் 2024 கூட்டு ராணுவப் பயிற்சியில் 1,315 கம்போடிய ராணுவ வீரர்கள் மற்றும் 760 சீன வீரர்கள் பங்கேற்கின்றனர். 2016 ஆம் ஆண்டு முதல் கோல்டன் டிராகன் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவுடனான அங்கோர் சென்டினல் எனப்படும் இதேபோன்ற பயிற்சிகளை கம்போடியா ரத்து செய்ததை அடுத்து, சீனாவுடனான கோல்டன் டிராகன் கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கப்பட்டது.