சிறுநீரக கற்களை கரைக்க தினந்தோறும் 2 லிட்டர் சிறுநீர் அருந்துங்கள்... கூகுள் ஏஐ பதிலால் இணையத்தில் பெரும் அதிர்ச்சி
07 May,2024
'சிறுநீரகக் கற்களை விரைவாக கரைக்க சிறுநீரை அருந்துங்கள்' என்ற கூகுள் ஏஐ அறிவுரைக்கு இணையவாசிகள் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகாட்டல் முதல் உடல் உபாதைக்கான மருத்துவ ஆலோசனை வரை சகலத்துக்கும் கூகுளில் விடை தேடும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு இணையதளங்களில் கிடைப்பதை திரட்டியே கூகுள் பதிலளித்து வருவதால், தொடக்க தேடல்களுக்கு அவை போதுமானதாகவே உள்ளன. எனினும் அவற்றில் வினோதங்கள் மற்றும் விசித்திரங்களும் நிறைந்திருக்கவே செய்கின்றன.
கூகுள் தேடலில் எஸ்ஜிஇ அதாவது ’சர்ச் ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அனுகூலம் கூடியிருக்கிறது. இதன் மூலம் கூகுள் தேடல் என்பது மேலும் நுட்பமாகவும், விரிவாகவும், ஆழமாகவும் அமைவதாக கூகுள் நம்பியிருக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் ஏறுமாறான பதில்களை கூகுள் தந்ததில், தேடுவோர் மட்டுமன்றி கூகுள் நிறுவனத்தையும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.
அதற்கு எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவரின் பகிர்வு உதாரணமனது. தொல்லைதரும் சிறுநீரகக் கற்களிடம் இருந்து எப்படி விடுபடுவது என்று ஒரு பயனர் கூகுளில் தேடியபோது, அவர் அதிர்ச்சிக்குரிய அந்த பரிந்துரையைப் பெற்றார். அதில் வழக்கமான ஆலோசனைகளுடன், நம்பவே முடியாத பரிந்துரை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதாவது, ‘சிறுநீரகக் கற்களை தினந்தோறும் குறைந்தது 2 லிட்டர் சிறுநீரை அருந்துங்கள்’ என்று பதில் கிடைத்திருந்தது.
இது கூகுள் தேடலில் அது அளிக்கும் பதில்களை உரசிபார்ப்பதற்கான மோசமான அனுபவமாகவும் இணையத்தில் சுற்றி வருகிறது. இணையத்தில் சரியான வழிகாட்டுதலை தேடுவது, பெரும்பாலும் வெற்றிகரமாக அமைவதில்லை. தேடலுக்கான சரியான தளத்தை அடைந்து அதனுள் தேடும்போது மட்டுமே துறை வல்லுநர்களின் தெளிவான பரிந்துரைகளை கண்டடைய முடியும். ஆனால், பொதுவாக கூகுள் தேடுபொறியில் குறிப்பிட்ட ஒன்றினை தேட முயற்சிக்கும்போது இப்படி ஏடாகூடமானதும் வர நேரிடும்.
எனவே கூகுள் தேடலை முழுமையாக நம்பாது, பொதுவான வழிகாட்டலுக்கும் மட்டுமே அவற்றை பின்பற்றுமாறு இணையவாசிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிறுநீரகக் கற்களை கரைப்பது போன்ற அவசிய மற்றும் அவசரமான தேவைகளுக்கு கூகுளை ஆராந்துகொண்டிராது, நேரடியாக மருத்துவர்களை நாடி ஆலோசனை பெறுவதே நல்லது என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அண்மைக் காலங்களாக கூகுளின் மேப் வழிகாட்டல் முதல் மருத்துவ பரிந்துரைகள் வரை சொதப்பல்கள் தொடர்வது, இன்னொரு பக்கம் நீதிமன்ற வழக்குகள் வரை அந்த நிறுவனத்தை கொண்டுபோய் நிறுத்தியுள்ளன.