குழந்தை ஆபாசத்தின் பெயரால் முடக்கப்பட்ட ஜிமெயில் சேவை
18 Mar,2024
சிறுவயது புகைப்படத்தை கூகுள் டிரைவில் சேமித்ததற்காக, குஜராத்தை சேர்ந்த கணினி பொறியாளர் ஒருவரின் ஜிமெயில் வசதியை கூகுள் நிறுவனம் மொத்தமாக முடக்கியது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
குஜராத்தை சேர்ந்த நீல் சுக்லா என்ற கணினி பொறியாளரின் ஜிமெயில் சேவை கடந்தாண்டு திடீரென முடங்கியது. அலுவலக மற்றும் தனிப்பட்ட உபயோகத்துக்கான அந்த ஜிமெயில் சேவை முடக்கப்பட்டதில் நீல் சுக்லா அதிர்ந்து போனார். இதனல் தொழில் பாதிப்புக்குள்ளாகி ஏராளமாய் இழப்பை சந்தித்தார்.
ஜிமெயில் சேவை முடக்கப்பட்டதன் பின்னணியை அறிந்துகொள்ள அவர் கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அப்போது கூகுள் அளித்த பதில் அவரை மேலும் அதிரச் செய்தது. குழந்தை நிர்வாணத்தை உள்ளடக்கிய ஆபாச படங்களை அவர் கூகுள் டிரைவில் சேமித்து வைத்ததால், அவரது ஜிமெயில் கணக்கு முடக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்தது.
அதன் பின்னணி விவரம் சுக்லாவுக்கு தாமதமாகவே தெரிய வந்தது. அதாவது தனது குழந்தை பிராயத்து படங்கள் பலவற்றை கூகுள் டிரைவில் சுக்லா சேகரித்து வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றாக 2 வயதாகும் சுக்லாவை, அவரது பாட்டி குளிப்பாட்டும் படமும் அடங்கும். அதனைத்தான் கூகுளின் ஏஐ குழந்தை ஆபாசம் என வகைப்படுத்தி இருந்தது.
இதனையடுத்து அவர் கூகுள் நிறுவனத்தை தொடர்புகொண்டு விளக்க முயன்றார். ஆனால் கூகுள் காதுகொடுப்பதாக இல்லை. போலீஸில் புகார் அளித்தார். தனிப்பட்ட தொழில்நுட்ப விவகாரம் என போலீஸும் கைவிரித்தது. இதனையடுத்தே கடைசி முயற்சியாக குஜராத் உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறார் சுக்லா.
வழக்கை விசாரித்ததில் சுக்லா தரப்பு நியாயத்தை உணர்ந்த குஜராத் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.