சுமார் ஒரு கோடிக்கும் மேலான இந்தியர்களின் செல்போன்களை ஆக்கிரமித்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை களவாண்டு வரும் செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. எனவே இந்தியர்களின் செல்போனில் இன்னும் அவை இருப்பின் உடனடியாக அவற்றை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ப்ளே ஸ்டோரில் உள்ள சந்தேகத்துக்கு இடமான செயலிகளை அவ்வப்போது அடையாளம் கண்டு கூகுள் நிறுவனம் நீக்கி வருகிறது. அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தலின் பெயரிலும் இவ்வாறு கூகுள் நடவடிக்கை எடுப்பதுண்டு. அந்த வகையில் அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்களின் பெயரில் 15க்கும் மேலான செயலிகளை கூகுள் அண்மையில் நீக்கியுள்ளது.
இவை செல்போனில் இருக்கும் புகைப்படங்கள், ஆவணங்கள் உட்பட ஏராளமான தனிப்பட்ட தகவல்களை களவாடும் போக்கை கொண்டவை. மேலும், செல்போனில் பயனரின் தனிப்பட்ட செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணிக்கவும் செய்யும். கடன் செயலிகள் என்ற பெயரில் அறிமுகமான இந்த களவு செயலிகள் பல்வேறு முகமூடிகளில் ப்ளே ஸ்டோரில் நிறைந்துள்ளன.
கடன் செயலிகளின் இந்த களவு நோக்கத்தின் பின்னணியில் பெரும் மோசடித் திட்டம் இருந்தது. கடன் வலையில் சிக்குவோரை பிற்பாடு பிளாக்மெயில் செய்து, பகல்கொள்ளைக்கு நிகராக கூடுதல் தொகைகளை பெறவும் இந்த செயலிகள் இயங்கி வந்தன. கடன் வாங்காத மற்றும் செயலியை தரவிறக்கம் செய்து ஆராய்ந்த பலரையும் கூட இந்த செயலிகள் பிளாக்மெயில் செய்து பெரும்தொகைகளை கறந்துள்ளன.
இந்த உளவு செயலிகள் தொடர்பான புகார்கள் எழுந்ததும், துறை விற்பன்னர்கள் வாயிலாக ஆராய்ந்து, ப்ளே ஸ்டோரில் இருக்கும் அபாயகரமான செயலிகளை அரசு தரப்பில் அடையாளம் காணப்பட்டன. அவை தொடர்பாக அரசு வழங்கிய அறிவுறுத்ததில் பெயரில், கூகுள் அவற்றை அதிரடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. தற்போது ப்ளே ஸ்டோரில் அவை இல்லை என்றபோதும், அவற்றை தரவிறக்கம் செய்த செல்போன்களில் அவை தொடர்ந்து இயங்கியே வருகின்றன.
எனவே பயனர்கள் உடனடியாக குறிப்பிட்ட அந்த செயலிகளை தங்கள் செல்போனில் இருந்து நீக்குவது அவசியமாகிறது. அப்படி நீக்க வேண்டிய உளவு செயலிகளின் பட்டியல் இங்கே:
Cartera grande, Flash Loan,Cash Wow, Guayaba Cash, Easy Cash, Easy Credit, CrediBus, AA Kredit, Amor Cash, Rநூpido Crளூdito, Prestamos Credito, Prestamos De Credito YumiCash, Go Credito, Instantநூneo Prளூstamo, Finupp Lending, TrueNaira, 4S Cash.