16,000 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன், ஆரோக்கியமாக செயல்படும் ஆச்சரியம்
09 Jan,2024
அலாஸ்கா ஏர் விமானத்தின் அசம்பாவிதம் காரணமாக சுமார் 16,000 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன் ஒன்று மாய் தனது ஆரோக்கிய செயல்பாட்டை உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவில் சில தினங்கள் முன்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, போர்ட்லேண்டிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் எதிர்பாரா அசம்பாவிதத்தை சந்தித்தது. விமான சுவரின் ஒரு பகுதியாக இருந்த பேனல் ஒன்று, கதவு திறந்தார்போல பெயர்ந்து சென்றது. நடுவானில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவத்தை அடுத்து சமயோசிதமாய் செயல்பட்ட விமானி உடனடியாக புறப்பட்ட விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறங்கச் செய்தார். இதன் மூலம் விமானத்தின் 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என அனைவரும் உயிர் தப்பினர்.
நடுவானில் விமானத்தின் சுவர் பெயர்ந்ததில், விமானத்தின் கேபினுக்குள் பெரும் அழுத்த மாறுபாடு ஏற்பட்டது. உடனடி ஆக்ஸிஜன் உதவி மூலம், பயணிகள் தங்களது மூச்சுத்திணறலை வெற்றிகரமாக எதிர்கொண்டனர். ஆனால் வெளிக்காற்று விமானத்தின் உள்ளிருந்தவற்றை உறிஞ்சி எடுத்ததில், ஒரு சில இருக்கைகள் உட்பட விமானத்தின் உள்ளிருந்த பலதும் ஆகாயத்தில் பறந்தன. நல்வாய்ப்பாக பேனல் உடைந்த இடத்தின் அருகே பயணிகள் இன்றி காலி இருக்கைகள் மட்டுமே இருந்ததில் அடுத்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அப்படி அலஸ்கா விமானத்தில் இருந்து ஆகாயத்துக்கு பறந்து சென்றவற்றுள், பயணிகளின் செல்போன்களும் அடங்கும். அவற்றில் ஒன்று 16 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த பிறகும் ஆரோக்கியமாக செயல்படுவதாக வெளியான தகவல் அமெரிக்காவுக்கு அப்பாலும் ஆச்சரியம் சேர்த்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான புதிய தலைமுறை ஐபோன் ஒன்று போர்ட்லேண்டின் சாலையோரத்தில் பல மணிநேரம் கழித்து மீட்கப்பட்டது. ஒரு புதருக்கு அடியில் கிடந்த அந்த ஐபோன், பேட்டரி சார்ஜ் குறையாது இருந்தது. அதன் ஸ்க்ரீன் லாக் திறந்து இருந்ததில் அந்த ஐபோனை எடுத்த சீனாதன் பேட்ஸ் என்ற நபர், அதனை உரியவரிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். டிக்டாக் வீடியோ ஒன்றில் இதனை பகிர்ந்திருந்த பேட்ஸ், தான் கண்டெடுத்த ஐபோன் திரையில் கீறல்கள் கூட இன்றி ஆரோக்கியமாக செயல்பட்டதாக விவரித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இதனை உறுதி செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளமும், ஆகாயத்திலிருந்து விழுந்த ஐபோன் பராமரிப்புக்கான விவரங்களை பதிவு செய்துள்ளது. கைதவறி ஓரிரு அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தாலே உயிரை இழக்கும் செல்போன்கள் மத்தியில், ஆகாயத்தின் 16 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்திருக்கும் ஐபோன், ஆப்பிள் நிறுவனத்துக்கு இலவச விளம்பரம் சேர்த்திருக்கிறது.