
சிங்கப்பூரில் தானியங்கி பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்க அந்நாட்டு அரசு தனியார் நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது.
சீனாவைத் தலைமையகமாகக் கொண்ட வீரைட் (Weride) எனும் நிறுவனம் தானியங்கி போக்குவரத்துத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறது. இப்போது தானியங்கி வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிய முதல் மற்றும் ஒரே நிறுவனமாக சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே சீனா, அமெரிக்கா, அமீரகம் போன்ற நாடுகளில் தங்களது தானியங்கி வாகனங்களை சோதித்துப்பார்க்க இந்நிறுவனம் அனுமதி பெற்றுள்ள நிலையில், சிங்கப்பூரில் தனது தானியங்கிப் பேருந்து சேவையைத் துவங்கியுள்ளது.
எம்1 மற்றும் டி1 எனும் இரண்டு அதிகாரப்பூர்வ அனுமதிகளை சிங்கப்பூரின் தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) வழங்கியுள்ளது.
இந்த வீரைட் தானியங்கிப் பேருந்துகள் குறைந்த வேகத்தில், குறிப்பிட்ட வழிகளில், குறைந்த போக்குவரத்து நெரிசல்கள் உள்ள பகுதிகளில் தற்போது இயக்கப்படுகிறது. மேலும் சோதனை ஓட்டம் என்பதால் பேருந்தில் ஒரு ஓட்டுநர் அவசரகால பாதுகாப்பிற்காக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.