.
முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ புறக்கணிக்கும் விளம்பரதாரர்கள் மீது ஈலோன் மஸ்க் நடத்திய அவதூறான தாக்குதல் நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. விளம்பரதாரர்களை இல்லாமல் எக்ஸ் சமூக வலைதளத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா?
கடந்த ஏப்ரலில் எக்ஸின் எதிர்காலம் பற்றி குழப்பமான பல நேர்காணல்களில் ஒன்றை கொடுத்தார் ஈலோன் மஸ்க்.
அப்படி ஒரு நேர்காணலில் விளம்பரம் பற்றி பேசுகையில், "எக்ஸ் சமூக வலைதளத்தில் டிஸ்னி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்வதற்கு தயாராக உள்ளார்கள் என்றால் எக்ஸ் சமூக வலைதளம் விளம்பரம் செய்வதற்கு ஒரு நல்ல இடம் என்றுதான் அர்த்தம்” என்று கூறினார்.
ஆனால், ஏழு மாதங்களுக்குப் பிறகு, டிஸ்னியும் ஆப்பிள் நிறுவனமும் எக்ஸில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டனர்.
மீடியா மேட்டர்ஸ் ஃபார் அமெரிக்கா என்ற அமெரிக்க அமைப்பின் விசாரணைக்குப் பிறகு இந்த நிறுவனங்கள் விளம்பரங்களை நிறுத்திவிட்டனர். காரணம், அந்த விசாரணையில் இந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் நாஜி சார்பு பதிவுகளுக்கு அடுத்ததாக தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை கடுமையாக மறுத்தது எக்ஸ் நிறுவனம். மேலும், அதன் ஆராய்ச்சி முறைகளை கேள்விக்குள்ளாக்கி அந்த நிறுவனத்திற்கு எதிராக ஒரு வழக்கைத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கொடுத்த ஒரு நேர்காணலில் எக்ஸில் விளம்பரம் செய்ய நிறுவனங்கள் மறுப்பதால் திவாலாகும் அளவிற்கு எக்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
.
ஈலோன் மஸ்க் என்ன சொன்னார்?
கடந்த ஆண்டு ஈலோன் மஸ்க் 3.6 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கிய ஒரு நிறுவனம் எப்படி திவாலாகும் என அனைவருக்கும் கேள்வி எழலாம். ஆனால், அதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏன் என்பதை புரிந்து கொள்ள, விளம்பர வருவாயில் எக்ஸ் எப்படி நம்பியிருக்கிறது? ஏன் எக்ஸை விட்டுச் சென்ற விளம்பரதாரர்கள் திரும்பி வரவில்லை என்பதைப் பார்க்க வேண்டும்.
எங்களிடம் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், கடந்த ஆண்டு எக்ஸின் வருவாயில் 90% விளம்பரத்தின் மூலம்தான் கிடைத்தது. எக்ஸ் நிறுவனத்தின் வணிகத்திற்கான இதயமே விளம்பரம்தான்.
புதன்கிழமை, மஸ்க் இதைப் பற்றி பேசுகையில், "எக்ஸ் நிறுவனம் தோல்வியடைந்தால். அது விளம்பரதாரர் புறக்கணிப்பால்தான் தோல்வியடையும். அதுவே எக்ஸ் நிறுவனத்தை திவாலாக்கும்," எனக் கூறினார்.
.
.
நூற்றுக்கணக்கான நிறுவனங்களுடன் பணிபுரியும் சந்தைப்படுத்தல் ஆலோசனை நிறுவனமான Ebiquity-யின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மார்க் கே கூறுகையில்,“விளம்பரதாரர்கள் யாரும் எக்ஸிற்கு திரும்பி வருவதற்கான அறிகுறி இல்லை” என்று கூறுகிறார்.
"விளம்பரம் மூலம் எக்ஸ் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய பணம் நின்றுவிட்டது. திரும்ப அந்த பணத்தை பெறுவதற்கான எந்த திட்டமும் அவர்களிடம் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டும் இனி X-இல் விளம்பரம் செய்வதில்லை என்று அறிவித்தது.
Insider Intelligenceன் முதன்மை ஆய்வாளர் Jasmine Enberg கூறுகையில், "எக்ஸிற்கு வருமானத்தை கொடுக்கும் விளம்பரதாரர்கள் மற்றும் நிறுவனங்களை பகிரங்கமாக மற்றும் தனிப்பட்ட முறையில் தாக்குவது வணிகத்திற்கு நல்லதல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்கும் தெரிந்துகொள்வதற்கும் ஒரு சமூக ஊடக நிபுணர் தேவையில்லை," என்றார்.
.
ஏப்ரல் மாதம் அவர் அளித்த பேட்டியில் விளம்பரத்தில் வரும் பணத்தை பயனர்களிடம் இருந்து வாங்கும் சந்தா பணத்தை வைத்து ஈடு செய்யமுடியாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது.
"ஒரு மில்லியன் மக்கள் $100 (8,337 ரூபாய்) வருடத்திற்கு சந்தா செலுத்தினால், அது $100 மில்லியன் (833 கோடி ரூபாய்) ஆகும். விளம்பரத்துடன் ஒப்பிடுகையில், இது மிகவும் சொற்ப வருமானம்” என்று அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
ட்விட்டர் 2022-ஆம் ஆண்டில் விளம்பர வருமானத்தில் கிட்டத்தட்ட 33,000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இன்சைடர் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் கணக்கின் படி, இந்த ஆண்டு அந்த வருமானம் 15 ,000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது
எக்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு முக்கிய செலவுகள் உள்ளன. முதலாவது முதலாவது பணியாளர்களுக்கான சம்பளம். மஸ்க் ஏற்கனவே எக்ஸில் ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்துள்ளார்.
இரண்டாவது, ட்விட்டரை வாங்குவதற்காக மஸ்க் கொடுத்த 3.6 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்துவது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, நிறுவனம் இப்போது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும்.
எக்ஸ் நிறுவனம் அதன் கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்த முடியாமலோ அல்லது ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த முடியாமலோ திவாலாகிவிடும்.
இருப்பினும், இந்த மோசமான சமபவம் நடப்பதை மஸ்க் கண்டிப்பாக தவிர்க்கவே விரும்புவார்.