360 டிகிரியில் சுழலும் டயர்: கொரிய நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு!
03 Nov,2023
360 டிகிரியும் சுழலும் வகையில் புதிய வகை டயரை கொரிய நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளதால் அது ஆட்டோமொபைல் துறையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் நாகரீக வளர்ச்சிப் படிநிலைகளில் சக்கரம் மிக முக்கிய இடம் பெற்றுள்ளது. சக்கரம் வந்த பிறகுதான் ஓரிடம் விட்டு ஓர் இடம் நகர்வது எளிதாகி, அதற்கு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு வகையில் மனிதன் வேகமாக வளரத் துவங்கினான்.
மனித நாகரீக வளர்ச்சி உச்சத்தை எட்டியிருந்தாலும் சக்கரம் பெரிய மாறுதலை அடையவில்லை. ஆனால், இனி எதிர்காலம் அப்படி இருக்காது என்பதற்கு தற்போது புதிய ஆதாரமாக கொரிய நிறுவனம் ஒன்று 360 டிகிரியிலும் செல்லும் டயர் ஒன்றை உருவாக்கியுள்ளது.
கொரியா நாட்டைச் சேர்ந்த டயர் தயாரிப்பு நிறுவனமான ஹான்குக் என்ற நிறுவனம் தற்போது 360 டிகிரியிலும் சுழலும் புதிய வகை டயர் ஒன்றை தயாரித்து சோதனை செய்து வருகிறது. இந்த டயரை வாகனங்களில் பொருத்தினால் வாகனங்களை நேராகவும் பக்கவாட்டிலும் பயன்படுத்த முடியும்.
தற்போது இந்த டயரை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. விரைவில் இது மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டயருக்கு அந்நிறுவனம் வீல்பாட் என பெயர் வைத்துள்ளது. இந்த டயர் மட்டும் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தால் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இந்த டயர் பொருத்தப்பட்ட வாகனங்களை பேரலல் பார்க்கிங் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். காரை பார்க் செய்ய ரிவர்ஸ் எடுத்து பார்க் செய்ய வேண்டிய சூழ்நிலையை இல்லாமல் காரை பக்கவாட்டில் நகர்த்தி எளிதாக பார்க் செய்யலாம்.
இந்த டயர் பொருத்தப்பட்ட காரில் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்களை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த டயர் என்பது நிச்சயம் ஒரு வரப் பிரசாதமாக அமையும். இது மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வாகன போக்குவரத்தை எளிமையாக்கி விடும்.
இந்த டயர்களை செமி ஆட்டோமெட்டிக் அல்லது ஆட்டோமெட்டிக் கார்களில் பொருத்துவதன் மூலம் விபத்து ஏற்படுவதை பெரும் அளவில் தவிர்க்க முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. அதனால் ஆட்டோமெட்டிக் மற்றும் செமி ஆட்டோமெட்டிக் கார்களுக்கு பிரத்தியேகமாக இந்த டயர்களை உருவாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.