ராட்சத ரோபோவை வடிவமைத்துள்ள ஜப்பான் நிறுவனம்
03 Oct,2023
டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த ஸ்டாட் அப் நிறுவனம் 15 அடி உயர ராட்சத ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. மனித வடிவ ரோபோ மற்றும் வாகனம் போல் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பேரிடர் கால மீட்பு பணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 15 அடி உயரத்திற்கு 4 சக்கரங்களுடன் சுபாமே நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ராட்சத ரோபோவின் பெயர் ஆர்சாக்ஸ். விமானத்தை விமானி இயக்குவது போல், ரோபோவின் உள்ளேயே மனிதன் அமர்ந்து இயக்கும் வகையில் இந்த நவீன ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது அனிமேஷன், ரோபோடிக் மற்றும் ஆட்டோ மொபைல் துறைகளுக்கு பயன்படும் விதமாக மொபைல் சூட் கண்டம் என்ற ஜப்பான் அனிமேஷன் தொடரை தழுவி நிறுவனம் இதனை உருவாக்கியிருக்கிறது. வாகனம் மற்றும் ரோபோ என இருவேறு விதமாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மனித எந்திரத்தை போல், மேலும் 4 ராட்சத மனித ரோபோக்களை உருவாக்கி அக்டோபர் இறுதியில் காட்சிப்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இவற்றின் விலை தலா 25 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.