நிலவில் தரையிறங்கி மாஸ் காட்டிய சந்திரயான் 3 விண்கலம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்!
24 Aug,2023
இந்தியாவின் கனவு திட்டமாக இருந்த சந்திரயான்-3 எனப்படும் இந்தியாவின் மூன்றாவது சந்திர பயணமானது நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை நிலவின் மேற்பரப்பில் 3 நாடுகள் தங்களின் விண்கலத்தை தரையிறக்கியுள்ளது. ஆனால் இதுவரை நிலவின் தென்துருவத்தில் எந்த நாடும் தங்களின் விண்கலத்தை தரையிறக்கியதில்லை. ஆனால் இந்தியா தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோவானது ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் உள்ள விக்ரம் ரோவர் நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தரையிறங்குவதாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இது இந்தியாவை ஒரு உயரடுக்கு விண்வெளி நாடாக உறுதிப்படுத்தியது மற்றும் இதன் மூலம் நிலவைப் பற்றிய ரகசியங்களை நன்கு தெரிந்து கொள்ள முடியும். இப்போது இந்த சந்திரயான்-3 விண்கலம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.
1. இந்திய தேசிய கொடி மற்றும் இஸ்ரோ சின்னம் பதித்தல் சந்திரயான்-3-ன் ரோவர் பிரக்யானில் நிலவின் தரையில் இந்திய தேசிய கொடி மற்றும் இஸ்ரோவின் சின்னத்தின் தோற்றத்தை பதிக்கும்படி வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் முயற்சி செய்யாத ஒன்றை செய்த ஒரே நாடாக இந்தியா வெளிக்காட்டும்.
2. குறைந்த முதலீட்டில் சந்திரயான்-3 சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.650 கோடி ஆகும். அதாவது, இது ஆதிபுருஷ் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.700 கோடி மற்றும் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய ஹிட்டான அவதாரின் பட்ஜெட் சுமார் ரூ.1970 கோடியை விட மிகவும் குறைவு. 3. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு இதுவரை நிலவில் விண்கலத்தை அனுப்பிய நாடுகள் எளிதில் தரையிறங்கக்கூடிய இடத்தில் தான் தங்களின் விண்கலங்களை
அனுப்பின. சமீபத்தில் விண்ணில் செலுத்திய ரஷ்யாவின் லூனா-25 திட்டம் வெற்றி பெற்றிருந்தால், ரஷ்யா நிலவின் தென் துருவத்தில் காலடி பதித்த முதல் நாடாக இருந்திருக்கும். ஆனால் இந்தியாவின் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறக்கியுள்ளதால், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. இதுவரை அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனாவிற்கு பிறகு நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா உள்ளது.
4. சந்திரயான்-1 ல் இருந்து தரவுகளை உருவாக்குதல் இந்தியாவின் முதல் சந்திர பயணமான சந்திரயான்-1 மூலம், 2009-ல் நிலவின் இருண்ட மற்றும் குளிர்ந்த பகுதிகளில் உறைந்த நீர் படிகங்களை கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலமும் அதையே ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. ஆனால், மென்மையாக தரையிறங்க முடியாமல் தோல்வியடைந்தது. இந்த இரண்டு திட்டத்தில் செய்த தவறுகளை சரிசெய்து தயாரிக்கப்பட்டது தான் சந்திரயான்-3.
இது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதோடு, அங்குள்ள நீர் இருப்பு பற்றிய தகவல்களை தரும். 5. சந்திரயான்-3 ரோவர் மற்றும் லேண்டர் சந்திரயான்-3 விண்கலமானது விக்ரம் என்ற லேட்டரையும், ப்ரக்யான் என்ற ரோவரையும் கொண்டிருந்தது. இதில் லேண்டருக்கு விக்ரம் என்ற பெயரிட காரணம், இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை மற்றும் இஸ்ரோ நிறுவனத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாய் நினைவாகவே பெயரிடப்பட்டுள்ளது.