"எனது காரில் இன்னும் 40 ஆயிரம் கிலோமீட்டர் கூட பயணிக்கவில்லை. அதற்குள் அதன் டயரை எப்படி மாற்ற முடியும்?" என்று கார் ஷோரூம் மெக்கானிக்கிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார் காரின் உரிமையாளர் நிஹாரிகா.
உங்களுடைய கேள்வி நியாயம் தான் மேடம். ஆனால், அவை நான்கு ஆண்டுகளான பழைய டயர்கள். எனவே அவற்றை மாற்றியே ஆக வேண்டும் என்று கூறினார் மெக்கானிக்.
காரில் நேற்று பயணித்து கொண்டிருந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது காரில் ஏசியை போட முயன்றேன். உடனே என் நண்பர் அப்படி செய்ய வேண்டாம் என்று தடுத்தார். இன்று மெக்கானிக் கார் டயரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்.
உண்மையில் காரை பற்றி தமக்கு நிறைய விஷயங்கள் தெரியவில்லையோ என்ற கேள்வியுடன் ஷோரூமை விட்டு வெளியே வந்தார் நிஹாரிகா. இவரை போன்றே, கார் வைத்திருக்கும் பலருக்கும் அதுகுறித்த முக்கியமான விஷயங்கள் தெரிவதில்லை.
காரை பயன்படுத்தாவிட்டாலும் டயரை மாற்றியே ஆக வேண்டுமா?
காரை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, மூன்று அல்லது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை டயரை மாற்றியே ஆக வேண்டும். இதனால் டயர் வெடித்து விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.
காரில் 10 அல்லது 20 கிலோமீட்டர் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது டயரில் காற்றின் அழுத்தம் 30- 35 வரை அதிகரிக்கும். அப்போது மூன்று அல்லது நான்காண்டுகளான டயர்களாக இருந்தால், அவை புது டயர்களை போல, காற்றின் அந்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாது. இதை நாம் அனுமானிக்கவும் இயலாது.
ஆனால் 80 கிலோமீட்டருக்கு மேலான வேகத்தில் கார் பயணிக்கும்போது டயர்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. இப்படி டயர்கள் வெடிப்பதற்கு பழைய டயர்கள் காரணமாக இருக்கலாம்.
அபாய பொத்தானை எப்போது அழுத்த வேண்டும்?
முக்கோண வடிவிலான அபாய பொத்தான் எல்லா கார்களிலும் பொதுவாக பொருத்தப்பட்டிருக்கும். விபத்து போன்ற அபாயகரமான சூழல்கள் மற்றும் பஞ்சர் ஓட்டுவதற்கு காரை சாலையோரத்தில் நிறுத்தும் தருணம், என முக்கியமான நேரங்களில் மட்டுமே அபாய பொத்தானை பயன்படுத்த வேண்டும்.
ஆனால், பலர் சாலை சந்திப்புகளில் காரை நிறுத்தும்போது கூட இதை பயன்படுத்துகின்றனர். இதனால் அதன் முக்கியத்துவம் குறையக்கூடும்.
அபாய பொத்தானை அழுத்தியதும் அதில் இருக்கும் நான்கு விளக்குகள் ஒளிரும். இதை காண்பவர்கள் நீங்கள் ஏதோயொரு அபாயகரமான சூழலில் இருக்கிறீர்கள் என்பதை அறிவார்கள். எனவே, மிகவும் முக்கியமான நேரங்களில் மட்டுமே அபாய பொத்தானை பயன்படுத்த வேண்டும்.
ஏர் பேக் இருந்தால் சீல் பெல்ட் அணிய வேண்டியதில்லையா?
காரில் உள்ள ஏர் பேக் இரண்டாம் நிலை பாதுகாப்பு அமைப்பாக தான் கருதப்படுகிறது. சீல் பெல்ட் தான் காரில் பயணிப்போருக்கு முதல் பாதுகாப்பு கவசம்.
விபத்து நேரும் போது நாம் ஸ்டீயரிங் மீது தான் அதிகமாக விழுகிறோம். அப்போது ஏர் பேக் திறந்திருந்தால், அது வெடிகுண்டுக்கு சமம். அதாவது இதனால் பயணிகளுக்கு கூடுதல் ஆபத்து ஏற்படும்.
அதுவே நாம் சீட் பெல்ட் அணிந்திருந்தால், விபத்து நேரும் போது பின்னோக்கி இழுக்கப்படுவோம். அப்போது ஏர் பேக் திறந்திருந்தாலும் சீட்டில் சாய்வோம். அதன் பின்னர் ஏர் பேக் அமைப்பு திறந்து நம் உயிரை காக்கும்.
காரில் வாசனை திரவியம் பயன்படுத்தலாமா?
வாசனை திரவியங்களில் சிறிதளவு ஆல்கஹால் கலந்திருக்கும். பயணத்தின் போது காருக்குள் ஆக்சிஜன் அளவு சற்று குறைவாக இருக்கும்.
அந்த நிலையில் வாசனை திரவியத்தில் இருக்கும் ஆல்கஹால், ஆக்சிஜனுடன் வேதிவினை புரிந்தால், சுவாச கோளாறு உள்ளவர்கள் காருக்குள் பயணிக்கும் போது அவர்களுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
அத்துடன் கார் பல்வேறு மின்னணு சாதனங்களால் வடிவமைக்கப்பட்டது என்பதால், ஏதேனும் தீ விபத்து நேர்ந்தால், வாசனை திரவியங்கள் அந்த சூழலை இன்னும் மோசமாக்கிவிடும். எனவே காரில் வாசனை திரவியம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மூடுபனி ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்?
குளிர் காலத்தில் மழை பெய்யும்போது வானிலையில் திடீரென மாறிவிடுகிறது. இது போன்ற நேரங்களில் காருக்கு உள்ளேயும், வெளியேயும் வெப்பநிலையில் நிலவும் வேறுபாடு காரணமாக மூடுபனி உருவாகிறது.
கார் கண்ணாடிகள் மீது படியும் மூடுபனி விரைவாக விலக, சிறிது நேரம் ஏசியை இயக்க வேண்டும். குளிர் காலத்தில் பயணிக்கும் போது கார் கண்ணாடிகளை சில அங்குலம் அளவுக்கு திறந்து வைத்தால், அவற்றின் மீது மூடுபனி படிவதை தடுக்கலாம்.
காரில் வெப்பத்தை குறைப்பது எப்படி?
சூரிய ஒளி படும்படி காரை நிறுத்தும்போது அதன் உள்ளே வெப்பம் அதிகரிக்கிறது. இந்த வெப்பத்தை வெளியேற்ற காரின் முன் பக்கத்தில் உள்ள இடதுபுற கதவையும், காரின் பின்புறம் இருக்கும் வலது புற கதவையும் சிறிது நேரம் திறந்து வைத்திருந்தால் காருக்குள் இருக்கும் வெப்பம் வெளியேறிவிடும்.
காரை நீண்ட தூரத்திற்கு இயக்குவதற்கு முன், ஜன்னல்களை நன்றாக திறந்துவைத்து குறைந்தபட்சம் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு காரை ஓட்ட வேண்டும். இதற்கிடையே ப்ளோயரை இயக்குவதன் மூலம் வெப்பம் வெளியேற்றப்படும்.
அதன் பிறகு, ஏசியை இயக்கினால் குளிர்ச்சியை நன்கு உணரலாம். ப்ளோயரை ஆன் செய்த சிறிது நேரம் கழித்து ஏசியை இயங்க விடுவதுதான் சரியான நடைமுறை.
இலக்கை அடைந்ததும் காரை உடனே நிறுத்த வேண்டாமா?
கார் 50 கிலோமீட்டருக்கு மேல் பயணித்திருந்தால், அதனை உடனே நிறுத்த கூடாது. இன்ஜினை இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஓட விட்ட பிறகு அதை நிறுத்த வேண்டும்.
ஏனெனில் அந்த நேரத்தில் காருக்குள் இருக்கும் வெப்பநிலையின் காரணமாக, டர்போ சார்ஜர் போன்ற சாதனங்கள் உடனே இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது.
எனவே இந்த சாதனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவகாசம் அளிக்கும் விதத்தில், சில நிமிடங்கள் கழித்து என்ஜினை நிறுத்துவது சிறப்பு.
இறக்கமான சாலைகளில் காரை நியூட்ரலில் இயக்கலாமா?
பெட்ரோலை மிச்சப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பைக் ஓட்டுபவர்கள் பலர், இறக்கமான சாலைகளில் பயணிக்கும்போது என்ஜினை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் காரில் இப்படி செய்யக்கூடாது.
சரிவான சாலைகளில் காரை நியூட்ரலில் இயக்கினால், நீங்கள் அனைத்து கட்டுப்பாட்டையும் இழக்க நேரிடும்.
கார் ஓட்டுவதில் நீங்கள் எவ்வளவு அனுபவம் மிக்கவராக இருந்தாலும் இவ்வாறு செய்வது தவறு. காரணம், கியரை மாற்றும்போது பிரேக்கிங்கும் தானாக நிகழும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
கியர் மற்றும் பிரேக்கிற்கு இடையேயான இந்த ஏற்பாடு, கார் எந்த சாலையில் பயணித்தாலும் அதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்கிறது. மாறாக, காரை நியூட்ரலில் வைத்து ஓட்டினால் பிரேக் வேலை செய்யாமல் போவதற்கும், அதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
காரின் உயரம் மாறுபடுகிறதா?
காரில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, அதன் உயரம் சற்று மாறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நுணுக்கமான இந்த விஷயத்தை நாம் தீவிரமாக கருத வேண்டியதில்லை என்றாலும், இந்த மாற்றத்திற்கேற்ப காரின் ஒளியை சரி செய்வதற்கான வசதியும் (Leveler) இருக்கிறது.
கார் ஓட்டுபவருக்கு இந்த வசதி எவ்வளவு முக்கியமோ, அதே போன்று எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுநருக்கு மிகவும் முக்கியம். சாலையில் இருந்து பரவும் ஒளி, எதிர் எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுநர்களின் கண்களில் பாயாதப்படி, லெவலர் இதனை விலக்குகிறது.