19 தனி பங்களாக்கள், 64 அடுக்குமாடி குடியிருப்புகள்,ரூஃப் டாப் கார்டன், தியேட்டர் , ஷாப்பிங் மால், விளையாட்டு மைதானம்ஸ இதெல்லாம் கொண்ட ஒரு மிதக்கும் நகரம் விரைவில் உலகை வலம் வரப்போகிறதுஸ
மனிதன் எத்தனையோ சாதனைகளை படைத்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனாலும் மனித மூளை இன்னும் ஓயவில்லை. தான் படைத்த முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் தினமும் புதிது புதிதாக, அதிசயங்களை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்ல மற்றொரு ஆச்சரியம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அது தான் பாங்கியோஸ் என்னும் ராட்சத மிதக்கும் நகரம்..பூமியின் முதல் மிதக்கும் இராட்சத நகரமாக, ஒரு புதிய பிரமாண்டமான படகை உருவாக்கி வருகிறது சவுதி அரேபியா.
200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாங்கியா என்ற மிகப்பெரிய கண்டத்தின் பெயரால் இந்த ஆமை வடிவ மிதக்கும் நகரம் பாங்கியோஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பாங்கியோஸில் ஒரே நேரத்தில் 60ஆயிரம் பேர் வரை தங்கமுடியும். ஏறக்குறைய, ஒரு குட்டி நகரத்தின் மக்கள் தொகையை இதனுள் அடக்கிவிடலாம். பாங்கியோஸ் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்த மிதக்கும் நகரத்தைச் செலவு செய்து உருவாக்கி வருவது சவூதி அரேபியா என்றாலும், இதை வடிவமைத்தது வேற நாடாகும்.
இந்த ஆடம்பர திட்டத்தை இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாஸரினி என்கிற ஆர்க்கிடெக்சர் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கி வருகிறது. இந்த மிதக்கும் நகரத்தின் நீளம் சுமார் ஆயிரத்து 800 அடியாகும். பாங்கியோஸ் அதன் மையப்பகுதியில், அதாவது அதன் இறக்கைகள் விரிந்து இருக்கும் இடத்தின் ஒட்டு மொத்த அகலம் சுமார் 2ஆயிரம் அடியாகும். இந்த மிதக்கும் ராட்சத படகில் ஒவ்வொரு ஆமை இறக்கையிலும் 19 வில்லாக்கள் மற்றும் 64 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும். இது தவிர, பாங்கியோஸில் ரூப் டாப் கார்டன், ஷாப்பிங் மால், தியேட்டர், விளையாட்டு மைதானம் மற்றும் பீச் கிளப் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆமை வடிவ மிதக்கும் நகரத்தின் தனித்துவமான கட்டமைப்பு என்று ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், இதில் உள்ள ’டெராஷிப்யார்ட்’. இந்த டெராஷிப்யார்ட் 650 மீட்டர் அகலமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இது கப்பலின் உள்பகுதியை கடலுடன் நேரடியாக இணைக்கும் கால்வாய் போன் அமைப்பாகும். இதன் மூலம் கடலில் இருந்து சிறிய கப்பல்கள், படகுகள் பாங்கியோஸின் மையப்பகுதிக்கு நேரடியாக வரமுடியும். ஆம், நேரடியாக கடலில் இருந்து வரும் சிறிய படகுகள் மூலம், இந்த வழியாக பாங்கியோஸின் மையத்தை மக்கள் அணுகலாம் என்பது மிகவும் சிறப்பான விஷயமாகும். பொதுவாகக் கப்பலில் ஒரு சிறிய ஓட்டை விழுந்தாலே, அந்த கப்பல் முழுமையாக நீரிற்குள் மூழ்கிவிடும். ஆனால், பாங்கியோஸின் திறமையான வடிவமைப்பின் மூலம், கடலுடன் நேரடியாக இணைக்கும் ஒரு பெரிய கால்வாயை கப்பலுக்குள் உருவாக்கியுள்ளனர்.
பாங்கியோஸ் விரைவில் உலகம் முழுவதும் பயணம் செய்ய உள்ளது. அதுவும் இடைநில்லாமல் உலகம் முழுவதும் பயணிக்க உள்ளது பாங்கியோஸ். இவ்வளவு பெரிய மிதக்கும் நகரத்தை இயக்க என்ன ஆற்றல் பயன்படுகிறது என்பதை கேட்டால் உண்மையில் மிரண்டு தான் போவீர்கள். கடல் அலைகளில் இருந்து சக்தியை பெற்று இந்த கப்பலை இயக்கும் வகையில் பொறியியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாங்கியோஸின் என்ஜின் கடல் அலைகள் மூலம் ஆற்றலைப் பெற்று, அதை சக்தியாக மாற்றி, இந்த ராட்சச உருவத்தை நகர்த்துகிறது. இத்துடன், இந்த படகு முழுமையாக சோலார் பேனல்களால் மூடப்பட்டுள்ளது என்பதனால், சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியையும் திறம்படப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை சக்தியைக் கொண்டு, பாங்கியோஸ் அதிகபட்சமாக 5 நாட்டிகல் மைல் அதாவது மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்த மிதக்கும் நகரத்தில் எல்லா விதமான வசதிகளும் இடம்பெற்றுள்ளன. படகின் ஒவ்வொரு மூலைக்கும் பயணிக்க இதில் கார்ட் கார் வசதியும் உள்ளது. இந்த பிரம்மாண்ட மிதக்கும் நகரமான பாங்கியோஸை இதை உருவாக்க 8 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். பாங்கியோஸ் தயாரானதும் இது லாஸரினி நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என பெருமையுடன் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.