இது கப்பல் இல்ல.. ஒரு மினி சிட்டி – வைரலாகும் ஆமை வடிவ கப்பல்!
20 Nov,2022
ஆமை வடிவிலான பிரம்மாண்டமான மிதக்கும் நகரம் ஒன்றின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலில் பயணிக்கும் சொகுசு கப்பல்களில் பல்வேறு வித்தியாசமான டிசைன்களில் கட்டுமானத்தை ஏற்படுத்தி வருபவர் இத்தாலிய கப்பல் கட்டுமான டிசைனர் பியர்பாவ்லோ லஸ்ஸாரினி. இவரது லஸ்ஸாரினி நிறுவனம் தற்போது புதிய கப்பல் ஒன்றை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதை கப்பல் என்று சொல்வதை விட மிதக்கும் நகரம் என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்களான Yacht எனப்படும் வகையில் கட்டப்படும் இந்த மிதக்கும் நகரத்தில் ‘பாஞ்சியா யாச்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. 335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கண்டங்கள் ஒரே நிலப்பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஒற்றை நிலத்தின் பெயர்தான் ‘பாஞ்சியா’. தற்போது இந்த ஆமை வடிவ பாஞ்சியா நகரம் கண்டம் விட்டு கண்டம் கடலில் பயணிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட மிதக்கும் நகரம் 1,800 அடி நீளமும், 2 ஆயிரம் அடி அகலமும் கொண்டது எனவும், இதில் ஒரே சமயத்தில் 60 ஆயிரம் பேர் பயணிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 60 ஆயிரம் மக்களுக்கும் தேவையான பல நீச்சல் குளங்கள், சலூன், மதுவிடுதி, திரையரங்குகள் என ஒரு மினி சிட்டியாக செயல்பட உள்ளதாம் பாஞ்சியா.
இதன் கட்டுமான பணிகளை லஸ்ஸாரினி நிறுவனம் சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்லா துறைமுகம் அருகே உள்ள கடல் பகுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு கட்டுமான செலவு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 65 ஆயிரம் கோடி) செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளதாம்.