ட்விட்டரின் உரிமத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்பு தினமும் ட்விட்டர், செய்தி பொருளாகவே மாறியது. அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு மாதம் 8 டாலர் வசூல் அறிவிப்பு, ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது ட்விட்டரின் புதிய விதிமுறைகள் வெளியாகியுள்ளது. புதிய விதிமுறையின் முழு விவரத்தை இதில் பார்ப்போம்.
ட்விட்டரின் புதிய விதிமுறைகள்:
ட்விட்டரின் முதன்மையான நோக்கமே மக்களின் கலந்துரையாடலுக்காகச் செயல்படுவது என்று முதல் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளனர். வன்முறை, வெறுப்பு, அடுத்தவரை வேண்டுமென்றே துன்புறுத்துவது போன்றவை அதனைச் சிதைக்கிறது. எனவே எங்களின் விதிமுறைகள் ட்விட்டர் உபயோகப்படுபவருக்குச் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவது என்று குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் பாதுகாப்பு விதிகள் :
வன்முறையை ட்விட்டர் அங்கீகரிப்பது இல்லை. தனிநபர் அல்லது குழுவாகத் தூண்டப்படும் வன்முறையில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
தீவிரவாதத்தைத் தோற்றுவிக்கக் கூடாது. தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
குழந்தை பாலியல் வன்கொடுமையை ட்விட்டர் முழுமையாக எதிர்க்கிறது. குழுவாக ஒருவரைக் குறிவைத்து கருத்தினால் தாக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும். துன்புறுத்தலில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
ஒருவரை வெறுக்கும் விதமாகப் பதிவிடக் கூடாது; வன்முறையைத் தூண்டுவது, அடுத்தவரை இனம், தேசியம், பாலினம், உருவம், மதம், வயது, நோய், உடல் நிலை போன்றவற்றை வைத்துப் பேசக் கூடாது.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக செயல்படக்கூடாது. அதே போல் தாக்குதல், வன்முறை போன்றவற்றை ஊக்குவிக்கும் தனிநபர் கணக்குகள் உடனடியாக நீக்கப்படும். மேலும் அந்த வகைப் பதிவுகளும் நீக்கப்படும்.
தற்கொலை செயலை ஊக்குவிக்கக் கூடாது. ஆபாச வீடியோ, புகைப்படங்கள், உணர்ச்சிகளைத் துன்புறுத்தும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடக்கூடாது. தாக்குதல் வீடியோக்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வீடியோக்களை செய்தி நிறுவனங்களும் பதிவிடக் கூடாது.
சட்டவிதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ட்விட்டரில் மறுக்கப்படும். அதில் அங்கீகாரம் இல்லாத பொருட்களை விற்பனை செய்வது, பொருட்களை வாங்குவது போன்றவையும் அடங்கும்.
ட்விட்டரின் தனியுரிமை:
அடுத்தவரின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றி பதிவிடக்கூடாது. அதே போல் அடுத்தவரின் விவரங்களை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
அடுத்தவரின் அறை நிர்வாண புகைப்படங்கள் அல்லது வீடியோவை அவர்களில் அனுமதியின்றி பதிவிடக்கூடாது. அதே போல் அந்தரங்க பதிவுகளுக்கு முறையான அனுமதி பெற்றுத் தான் பதிவிட வேண்டும்.
ட்விட்டரின் நம்பகத்தன்மை :
ட்விட்டரின் அடுத்தவரின் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்தல். தகவல்களைத் தடுத்தல், மக்களில் ட்விட்டர் அனுபவத்தைப் பாதிக்கும் படி செய்தல் போன்றவை அங்கீகரிக்கப்படாது.
ட்விட்டர் சேவையைப் பயன்படுத்தித் தேர்தலைப் பற்றிய தகவல்களில் தலையிடக்கூடாது. இதில் தேர்தல் நேரங்களில் மக்களைத் தவறாக வழிநடத்தும் பதிவுகள் அங்கீகரிக்கப்படாது.
அடுத்தவரின் பெயர்களை பயன்படுத்தி ட்விட்டரில் கணக்கு வைத்துக்கொண்டு மக்களைக் குழப்புவது, தவறான பாதையில் நடத்துவது, ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அதே போல், தவறான கணக்குகளை வைத்து மேல் குறிப்பிட்ட செயல்களிலும் ஈடுபடக்கூடாது.