20 சதவீதத்திற்கும் குறைவான மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
இந்த ஆண்டு, 530 கோடி கைபேசிகள் மறுசுழற்சி செய்யாமல் தூக்கி வீசப்படவுள்ளதாக சர்வதேச மின்சார மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் மன்றம் (WEEC) கூறுகிறது.
உலகளாவிய வர்த்தகத் தரவுகளின் அடிப்படையில் அதன் மதிப்பீடு "மின்னணு கழிவு" என்ற வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிரச்னையை எடுத்துக் காட்டுகிறது.
பலர் பழைய கைபேசிகளை மறுசுழற்சி செய்யாமல் தங்களிடமே வைத்துள்ளார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
மின்னணு சாதனங்களில் உள்ள மின்கம்பிகளில் இருக்கும் தாமிரம் அல்லது ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளில் இருக்கும் கோபால்ட் போன்ற பிரித்தெடுக்கப்படாத விலைமதிப்பற்ற தாதுக்கள் மின்னணு கழிவுகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.
"வெளித்தோற்றத்திற்கு அற்பமானவையாகத் தோன்றும் அனைத்து பொருட்களும் அதிக மதிப்புடையவை என்பதை மக்கள் உணர மாட்டார்கள். அதே பொருட்களை உலகம் முழுக்க மொத்தமாகப் பார்க்கையில் மிகப் பெரிய அளவில் இருக்கின்றன," என்று சர்வதேச மின்சார மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் மன்றத்தின் இயக்குநர் ஜெனரல் பாஸ்கல் லெராய் கூறினார்.
உலக அளவில் 1600 கோடி கைபேசிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் ஐரோப்பாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இப்போது பயன்பாட்டில் இல்லை
சலவை இயந்திரங்கள், டோஸ்டர்கள், பட்டிகை(tablet), ஜிபிஎஸ் கருவிகள் போன்ற மின்சார, மின்னணு கழிவுகளின் எடை 2030ஆம் ஆண்டின்போது, ஓராண்டுக்கு 7.4 கோடி டன் அளவுக்கு வளரும் என்று இந்த ஆய்வு காட்டுவதாக சர்வதேச மின்சார மற்றும் மின்னணு கழிவுகள் மன்றம் கூறுகிறது.
விலை மதிப்பற்ற உலோக விநியோகச் சங்கிலிகளை அச்சுறுத்தும் யுக்ரேன் போர் போன்ற உலகளாவிய சிக்கல்களை மேற்கோள் காட்டி, புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு, மின்னணு கழிவுகளில் இருந்து தேவையான பொருட்களை எடுப்பதை ஊக்குவிக்கும் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியது ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி.
சர்வதேச மின்சார மற்றும் மின்னணு கழிவுகள் மன்றத்தைச் சேர்ந்த மேக்டலீனா சரிடனோவிச், "புதிய மின்னணு சாதனங்கள் அல்லது காற்றாலை விசையாழிகள், மின்சார கார் பேட்டரிகள், சூரிய மின்சாரத் தகடுகள் போன்ற பிற கருவிகளின் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய பல முக்கிய பொருட்களை இந்தப் பழைய சாதனங்கள் வழங்குகின்றன. இவையனைத்தும் பசுமை, டிஜிட்டல் மற்றும் குறைந்த கரிமத்திற்கு மக்கள் சமூகங்கள் மாறுவதற்கு மிகவும் அவசியமானவை," என்று கூறினார்.
உலகின் மின் கழிவுகளில் 17% மட்டுமே சரியாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆனால், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் அடுத்த ஆண்டுக்குள் அதை 30% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது "வேகமாக அதிகரித்து வரும் மிகவும் சிக்கலான கழிவுகளில் ஒன்று. இது மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் இரண்டையும் பாதிக்கிறது. ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருக்கலாம்!" என்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் குறிப்பிடுகிறது.
பிரிட்டனில், 5.63 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மில்லியனுக்கும் அதிகமான பயன்படுத்தப்படாத, ஆனால் வேலை செய்யக்கூடிய மின்சாதனப் பொருட்கள், தற்போது பிரிட்டன் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன என்று மெட்டீரியல் ஃபோகஸ் என்ற அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு சராசரி பிரிட்டன் குடும்பம் தன்னிடமுள்ள தேவையற்ற சாதனங்களை விற்று சுமார் 200 பவுண்ட் வரை திரட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு கணக்கிட்டது.
நிறுவனத்தின் ஆன்லைன் பிரசாரம் மறுசுழற்சி மையங்களை எங்கு கண்டுபிடிப்பது என்பது உள்ளிட்ட உதவிக்குறிப்புகளை வழங்குகிறது.
"இன்னும் நிறைய செய்ய முடியும். மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்கான சேகரிப்புப் பெட்டிகளை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்குதல், புதிய உபகரணங்களைக் கொடுக்கும்போது உடைந்த உபகரணங்களை எடுத்துச் செல்வது, அஞ்சல் பெட்டிகளைப் போல் சிறிய மின்கழிவுகளைத் திரும்பப் பெறும் பெட்டிகளை அமைத்தல் போன்றவை, இந்தப் பொருட்களை மக்களிடமிருந்து திரும்பப் பெறுவதை ஊக்குவிப்பதற்கான சில முயற்சிகள்," என்கிறார் லெராய்.