சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது.
யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது 4 விளம்பரங்கள் தான். அதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்தா தொகை கட்டி ப்ரீமியம் பயனாளர் என்ற தகுதியை அடைய வேண்டும்.
சரி, விளம்பரங்கள் தானே, வந்தால் வந்துவிட்டு போகிறது. அதை சேர்த்து காணொளி பார்ப்போம் என்றுதான் நீங்கள் இதுவரையிலும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
இனி அந்த எண்ணத்திற்கும் வேட்டு வைக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது யூடியூப் நிறுவனம்.
அதாவது, நீங்கள் 4கே தரத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு ப்ரீமியம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்று யூடியூப் நிறுவனம் அறிவுறுத்துகிறதாம்.
இந்த நிபந்தனை தொடர்பில் யூடியூப் நிறுவனம் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால், பயனாளர்கள் 4k காணொளியை பார்க்க முயன்றபோது இத்தகைய நிபந்தனை அவர்களது திரையில் தோன்றியதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ரெடிட் சமூக வலைதளத்தில் இதுதொடர்பான புகாரை பயனாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து ரெடிட் பயனாளர் ஒருவரின் பதிவில், 4k வீடியோ பார்க்க முயன்றபோது, “ப்ரீமியம் - அப்கிரேட் செய்யுங்கள்’’ என்ற வாசகம் திரையில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இதன் அர்த்தம் என்னவென்றால் இனியும் நீங்கள் 4k தரத்திலான காணொளிகளை இலவசமாகப் பார்க்க இயலாது. உங்களுக்கு வேண்டுமானால் 1440பி அல்லது 2k தரத்திலான வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம்.
இலவசமாக கிடைக்கும் அதிகப்பட்ச தரத்திலான வீடியோக்கள் இந்த வகையைச் சார்ந்தவை தான்.
சாதாரணமாக நாம் தொலைபேசியில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு இந்த 4k தரம் தேவைப்படாது.
ஆனால், தொலைக்காட்சி உள்ளிட்ட பெரிய திரைகளில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக 4k தரம் இருந்தால் தான் உடையாமல் தெளிவாக தெரியும்.
இதுவரையிலும் 4k தரத்தில் பெரிய திரையில் காணொளி பார்த்து வந்தவர்களுக்கு யூடியூபின் இந்த நடவடிக்கை நிச்சயம் அதிர்ச்சி தருவதாக அமையும்.
குறிப்பாக எச்டி தரத்தில் வீடியோ பாடல் மற்றும் படங்களை பார்க்க நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சலாம்.
மாதத்திற்கு ரூ.129 அல்லது 3 மாதங்களுக்கு ரூ.399 அல்லது ஓராண்டுக்கு ரூ.1,290 என்ற அடிப்படையில் யூடியூப் ப்ரீமியம் வழங்கப்படுகிறது.
நீங்கள் ப்ரீமியம் வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கு விளம்பர இடையூறுகள் இன்றி வீடியோ பார்க்கும் வசதி கிடைக்கும்.
இது தவிர பிக்சர் - இன் - பிக்சர் பிளேபேக் வசதி, யூடியூப் ப்ரீமியம் மியூஸிக் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
காணொளிகளை தரவிறக்கம் செய்து ஆஃப்லைனிலும் பார்த்துக் கொள்ளலாம்.