சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் முயற்சி சடுதியாக நிறுத்தம்
30 Aug,2022
அமெரிக்க விண்வெளி மையமான நாசா இன்று சந்திரனை நோக்கி அனுப்பவிருந்த ஆர்த்தெமிஸ் - 1 என்ற மிகப்பெரிய உந்துகணையின் ஏவுதல் முயற்சி தொழில்நுட்பக் கோளாறுகளால் இறுதிநேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
198மீற்றர் உயரமும் 2,600 தொன் எடையும் கொண்ட ஆர்த்தெமிஸ் - 1 உந்துணை இன்று விண்ணில் பாயுமென உலகமே எதிர்பார்த்திருக்க அதன் நான்கு இயந்திரங்களில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் இறுதிநேரத்தில் ஏவும் முயற்சி கைவிடப்பட்டது.
அடுத்த ஏவுதல் முயற்சி செப்டம்பர் 2 ஆம் திகதியன்று இடம்பெறுமென நாசா தற்போது அறிவித்துள்ளது.
அமெரிக்க நேரப்படி காலை புளோரிடாவிலிருந்து இந்த உந்துகணை ஏவப்படவிருந்தது.
1972 க்குப் பின்னர் முதன்முறையாக மனிதர்கள் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் சந்திரனுக்கு செல்லவுள்ள நிலையில் அதற்கு முந்தைய முக்கியமான சோதனை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த ஏவுதல் நடவடிக்கை நோக்கப்பட்டிருந்தது.
எனினும் நான்கு இயந்திரகளில் மூன்று எதிர்பார்த்தபடி செயற்பட்டபோதும் ஒரு இயந்திரத்தில் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஏவதலுக்கு 10 நிமிடங்கள் இருக்கும் போது அதனை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து ஏவுதல் நிகழ்வை நேரடியாகக் காண கென்னடி விண்வெளி மையத்திற்கு சென்ற துணை அரச தலைவர் கமலா ஹரிஸ் உட்பட்ட பிரபலங்களும் புளொரிடாவில் கூடியிருந்த சுமார் ஒரு லட்சம் பேரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.