மின்சாரத்தில் இயங்கும் கடல் விமானம்: புதிய முயற்சியை கையிலெடுக்கும் கனடா!
29 Aug,2022
கனடா நாட்டை சேர்ந்த கடல் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று 100% மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை தயாரித்து தன்னுடைய சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. அவர்கள் தயாரித்த இந்த விமானம் 24 நிமிடத்தில் 72 கிலோமீட்டர் பயண தொலைவைக் எந்தவித பிரச்சனையும் இன்றி கடந்துள்ளது.
கனடாவை சேர்ந்த ஹார்பர் ஏர் (Harbour Air) எனும் விமானம் தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அனைத்து கடல் விமானங்களையும் 100% மின்சாரத்தில் இயங்கும் வகையில் மறு உருவாக்கம் செய்து உலகிலேயே 100% மின்சாரத்தில் எங்கு விமானங்களை தயார் செய்யும் முதல் நிறுவனமாக திகழ வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
ஏற்கனவே தரைவழி போக்குவரத்தில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும்படி செய்து, உலகம் முழுவதும் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது வான்வழிப் போக்குவரத்தும் இந்த மின்சாரத்தில் இயங்கும் முறையை பயன்படுத்த முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுசூழல் மாசுபாடும் பெருமளவில் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் ஹார்பர் ஏர் என்ற இந்த நிறுவனம் தற்போது தான் தன்னுடைய முயற்சியில் கிட்டத்தட்ட முழு வெற்றியை எட்டி உள்ளது.
முழுவதும் மின்சாரத்தில் இயங்கும்படி மறு உருவாக்கம் செய்யப்பட்ட தனது விமானத்தை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பறக்கவிட்டு சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. சோதனை ஓட்டத்தில் அந்த விமானம் ஆனது வெறும் 24 நிமிடங்களில் 72 கிலோ மீட்டர் தொலைவில் பறந்து எந்தவித இயந்திரக் கோளாறும், எந்த வித பிரச்சனைகளுக்கும் உட்படாமல் வெற்றிகரமாக தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது. முழுவதும் மின்சாரத்தில் இயங்ககூடிய வணிக விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வரும் நிலையில், இந்த முயற்சியானது அதற்கு ஒரு முக்கிய படிக்கல்லாக பார்க்கபடுகிறது.
மேலும் அமெரிக்க சிவில் எஜுகேஷன் ஏஜென்சி (American Civil Education Agency) – யிடமும் கனடாவின் போக்குவரத்து அமைச்சகத்திடமும் உரிய சான்றிதழையும் அனுமதியையும் பெற இந்த சோதனை ஓட்டமானது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய விமானங்களை கொண்டுள்ள முதல் கம்பெனி என்ற அந்தஸ்தை பெற விரும்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சாரத்தில் இயங்கக் கூடிய விமானங்கள் சந்தைக்கு வந்த பிறகு அவற்றை வாங்கி பயன்படுத்துவதை விட, நாமே புதிதாக மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை தயாரித்தால் என்ன என்று யோசனை செய்து இந்த முயற்சியை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதற்காக எலக்ட்ரிக் மோட்டார் தயார் செய்யும் நிறுவனமான மேக்னிஎக்ஸ் ( MagniX) என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த முயற்சியை செய்துள்ளது. ஹார்பர் ஏர் நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த முயற்சி ஒருநாள் வெற்றியடையும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில். இந்த சோதனை ஓட்டத்தில் கிடைத்த வெற்றி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது.