இரும்பு போன்ற தாதுக்களை சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்து, அவற்றை ஆலைகளுக்கு ரயில் வாயிலாக கொண்டு செல்வது மிகவும் செலவு பிடித்த வேலை. அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு. ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழில்கள் பல உள்ளன.
எனவே மூலப் பொருட்களைக் கொண்டு செல்லும் ரயில்களை பசுமை வாகனங்களாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.அதில் ஒன்று தான் புவியீர்ப்பு விசையை வைத்தே ஆற்றலை தயாரித்து ரயிலை ஓட்டுவது. ஆஸ்திரேலியாவின் 'போர்டெஸ்கியூ' சுரங்க நிறுவனமும், பிரிட்டனின் 'டபிள்யு.ஏ.இ.,' நிறுவனமும் கூட்டாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளன.
மூலப்பொருட்களை சுமந்தபடி செல்லும் ரயில் வண்டிகளை, சற்றே இறக்கமான பாதைகளை அமைத்து, அதில் இயந்திர இழுவை இல்லாமல் தானாகவே செலுத்துகின்றன.அப்போது சக்கரங்களின் சுழற்சியில் மின்சாரம் தயாராகிறது. அந்த மின்சாரத்தை வைத்து, அடுத்து மேடாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் வண்டி செல்லும்.
பின் மீண்டும் இறக்கப் பாதை... இப்படியே புவியீர்ப்பு விசையை மட்டும் வைத்து அந்த ரயில் ஆலைவரை மூலப்பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.இதற்கென தனிப்பாதைகளை அமைத்து இரு நாட்டு நிறுவனங்களும் சோதனைகள் செய்து வெற்றி கண்டுள்ளன. இந்த நுட்பத்திற்கு 'இன்பினிட்டி டிரெயின்' என பெயரிட்டுள்ளது, போர்டெஸ்கியூ நிறுவனம்.
அதாவது, 'முடிவிலி தொடரி!' இந்த தொழில் நுட்பம் நடைமுறைக்கு வந்தால், இந்தியா போன்ற நீண்ட நெடிய ரயில் வண்டி அமைப்பை வைத்திருக்கும் நாடுகளில், ரயில் பயணம் மிக மிக குறைவானசெலவில் இயங்கத் துவங்கிவிடும்.
கூரை மட்டும் தான் சூரிய மின் பலகைகளிலிருந்து மின் ஆற்றலை உற்பத்தி செய்ய உகந்த இடமா? கட்டடம் என்று இருந்தால், நான்கு சுவர்கள் மீதும் வெயில் படத்தான் செய்கிறது. அதை விட்டுவைப்பானேன்? சுவர்களுக்கு சூரிய ஒளிப் பலகைகள் வராததற்கு அதன் கரிய நிறம்தான் காரணம். சுவர்களின் அழகை அவை மட்டுப்படுத்துவதாக பலர் நினைப்பதால், சுவரின் வெயில் ஆற்றல் வீணாவதை சில விஞ்ஞானிகள் விரும்பவில்லை.
உடனே, பல வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் சூரிய மின் பலகைகளை தயாரிக்கத் துவங்கியுள்ளனர்.கனடாவிலுள்ள மிட்ரெக்ஸ் நிறுவனம், பலவித வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களில் சூரிய மின் பலகைகளை வடிவமைத்துள்ளது. இவை வெளிச் சுவர்களுக்காகவே தயாரிக்கப்படுபவை. கட்டடத்துடன் ஒருங்கிணைந்த சூரிய மின் பலகை (BIPV) என்று இந்த பலகைகளுக்கு பெயர்.சுவரின் மேற்பரப்பில், எந்த வடிவத்திலும் வெட்டி ஒட்டும்படி பலகைகளை மிட்ரெக்ஸ் தயாரித்து வருகிறது.
ஒரு சராசரி வீட்டின் சுவர்களில் இப்பலகைகளை அமைத்தால், 350 வாட் மின்சாரம் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் மிட்ரெக்சின் ஆராய்ச்சியாளர்கள்.விரைவில் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் பரவிவிடும் என்பதில் சந்தேகமில்லை