டுவிட்டர், பேஸ்புக்' முடக்கியதால் புதிய தளத்தை உருவாக்கிய டிரம்ப்
22 Oct,2021
பேஸ்புக், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள், தன் கணக்கை முடக்கி வைத்துள்ளதால் தனியாக புதிய சமூக வலைதளத்தை துவக்கியுள்ளார், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு இறுதியில் தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.இந்நிலையில் ஜன., 6ல், அமெரிக்க பார்லிமென்ட் அமைந்துள்ள 'கேபிடோல்' கட்டடத்துக்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் சூறையாடினர்.வன்முறையைத் துாண்டும் வகையில் பதிவுகள் வெளியிட்டதால், அமெரிக்காவைத் தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள், டிரம்பின் கணக்கை தற்காலிகமாக முடக்கின. பின் நிரந்தரமாக முடக்கின.
மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட துவங்கியுள்ள டிரம்ப், புதிய சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளார். அவரது 'டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமம்' சார்பில், 'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் புதிய சமூக வலைதளம் அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்த மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில் டிரம்ப் கூறியுள்ளதாவது:தலிபான்கள் மிகப் பெரிய அளவில் சமூக வலைதளத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால், உங்களுக்கு மிகவும் பிடித்த முன்னாள் அதிபரின் கணக்கு ஓரம்கட்டப்பட்டுள்ள உலகில் நாம் இருக்கிறோம்.இது ஏற்புடையது அல்ல. மக்களுடன் தொடர்பில் இருக்க புதிய சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.