ஆசியாவின் முதல் பறக்கும் கார் அறிமுகம் செய்து சென்னை நிறுவனம் அசத்தல்
                  
                     06 Oct,2021
                  
                  
                      
					  
                     
						
லண்டனில் நடைபெற்ற உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் விழாவில் சென்னையை சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது.
 
பறக்கும் காரின் டிஜிட்டல் ப்ரோடோடைப் வீடியோவை அந்நிறுவனம் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. அதில் காரின் கேபின் மற்றும் இருக்கை அமைப்பு எவ்வாறு உள்ளது என தெளிவாக தெரிகிறது. இந்த காரில் இருவர் பயணிக்க முடியும். இதன் கதவுகள் இறக்கை போன்று திறக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பறக்கும் கார் தொடர்ச்சியாக 60 நிமிடங்களுக்கு மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது தரையில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இந்த கார் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் கொண்டு இயங்குகிறது.
விணாடாவின் பறக்கும் கார் ப்ரோடோடைப் 2023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கொண்டு பொதுமக்கள் போக்குவரத்து, அவசர தேவை மற்றும் பொருட்களை வினியோகம் செய்ய பயன்படுத்தலாம்.