ஸ்டார்ஷிப் என்கிற மேல்பாகத்தை, சூப்பர் ஹெவி என்கிற அடிபாகத்தோடு இணைத்துப் பார்க்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
உலகின் முன்னணி வணிகர்களில் ஒருவரான ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டை கட்டமைத்து இருக்கிறது.
இந்த ராக்கெட்டில் மொத்தம் இரு பாகங்கள் இருக்கின்றன. ஒன்று ராக்கெட்டின் மேல் புறமான ஸ்டார்ஷிப். இரண்டாவது அடிப்பாகமான பூஸ்டர். இந்த பூஸ்டரை சூப்பர் ஹெவி என்று அழைக்கிறார்கள்.
இந்த இரண்டையும் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகாவில் உள்ள அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான ஸ்டார்பேஸில் கடந்த வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.
இந்த ராக்கெட்டின் தோராய உயரம் 120 மீட்டர். இதுவரை ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அனைத்தையும் விட இது அதிக உயரமானது.பூமியில் இருந்து மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய ராக்கெட் உருவாக்கிய உந்து விசையை விட, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த ராக்கெட் இரு மடங்கு அதிக உந்து விசையை உருவாக்கும்.
அப்பல்லோவின் பிரபலமான சாட்டர்ன் V ராக்கெட்டில் உள்ள இன்ஜின்கள் 35 நியூட்டன் விசையைத் தான் உருவாக்கியது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸின் இந்த ராக்கெட் சுமார் 70 நியூட்டன் விசையை உருவாக்கும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹெவி த்ரஸ்டர் அடிபாகத்தையும், ஸ்டார்ஷிப் என்கிற மேல் பாகத்தையும் இணைக்க பிரம்மாண்ட ராட்சத க்ரேன்கள் தேவைப்பட்டன.
இந்த இரு பகுதிகளையும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு இணைத்து வைக்கப்பட்டன. அதன் பின் மீண்டும் இரண்டையும் தனித்தனியாக பிரித்து வைத்து இருக்கிறார்கள்.
இந்த பிரம்மாண்ட ராக்கெட்டின் அடிப்பாகமான சூப்பர் ஹெவி த்ரஸ்டர், ஸ்டார்ஷிப் என்கிற மேல்பாகத்தை விண்வெளிக்கு உந்தித் தள்ளும்.
ஸ்டார்ஷிப் உலகை வலம் வந்து, ஹவாயில் இருக்கும் பசிபிக் பெருங்கடலில் டிஸ்போசல் லேண்டிங் முறையில் தரையிறங்கும். சூப்பர் ஹெவி த்ரஸ்டர்கள் மெக்சிகோ வளைகுடாவில் விழும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமோ நிலத்திலோ அல்லது கடலிலோ, இரு பாகங்களும் முழு கட்டுப்பாட்டோடு தரையிறங்க வேண்டும் என விரும்புகிறது. அந்த பாகங்களை மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ்.
ஸ்டார்ஷிப் அமைப்பு முழுமையாக கட்டமைக்கப்பட்டால், அது மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்குக் கூட அழைத்துச் செல்லும் திறனுடையதாக இருக்கும் என்கிறார் அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஈலோன் மஸ்க்.
மேலும் உலகத்துக்குள் மக்களை விரைவாக அழைத்துச் செல்ல உதவும். செயற்கைக் கோள்களை அதன் சுற்றுவட்டப் பாதையில் வைக்கவும் உதவும்.
இந்த தசாப்தத்துக்குள், நிலவின் தெற்கு துருவத்துக்கு அருகில் விண்வெளி வீரர்களை தரை இறக்கும் விதத்தில் ஸ்டார்ஷிப்பின் மேல் பாகத்தை உருவாக்குமாறு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளது நினைவுகூரத்தக்கது.
ஸ்டார்பேஸில், முன் மாதிரிகளைத் தொடர்ந்து பொறியாளர்கள் ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறார்கள். இது தான் வடிவமைப்பு அணிக்கு மிகப் பெரிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ராக்கெட்டை எப்படி வடிவமைப்பது என புரிந்து கொள்ள உதவியது.
மேலும் சில ஸ்பேஸ் எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்களை அதிக உயரத்துக்கு அனுப்பி வைத்ததன் மூலம் அவர்கள் விலைமதிப்பற்ற பயண அனுபவத்தைப் பெற்றனர்.
சூப்பர் ஹெவி மற்றும் ஸ்டார்ஷிப் பாகங்களுக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக தரப்பிலிருந்து அனுமதி கிடைக்கும் வரை ஏவப்படாது.
தற்போது இந்த ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக அமைப்பு சுற்றுச்சூழல் குறித்த பரிசீலனைகளைச் செய்து வருகிறது. இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ரீதியில் கருத்து தெரிவிக்க மக்களுக்கு 30 நாள் அவகாசம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஈலோன் மஸ்கோ, இத்திட்டம் 2021ஆம் ஆண்டுக்குள் நடக்க வேண்டும் என்பதில் படு தீவிரமாக இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஸ்டார்ஷிப் மற்றும் சூப்பர் ஹெவி இரண்டையும் ஒன்றாக இணைத்தது, கனவு நனவானது போல் இருந்தது எனக் கூறியுள்ளார் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் ராக்கெட்களிலேயே அதிக உந்து விசையை கொடுக்கும் ராக்கெட் ஃபால்கன் ஹெவி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ராக்கெட்டையும் ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தான் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.