அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள, 'ரோவர்' எனப்படும், ஆய்வு வாகனம் தரையிறங்க உதவிய, பாராசூட்டில், ரகசிய வாக்கியம் இடம் பெற்றிருந்தது.
நாசா அனுப்பிய ரோவர் எனப்படும் ஆய்வு வாகனம், செவ்வாய் கிரகத்தில், சமீபத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஆய்வு வாகனம் தரையிறங்க, 70 அடி உயர, பிரமாண்ட பாராசூட் பயன்படுத்தப்பட்டது.நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த, கம்ப்யூட்டர் இன்ஜினியரான, இவான் கிளார்க், குறுக்கெழுத்துப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அந்த பாராசூட்டில், 'பைனரி' எனப்படும் கம்ப்யூட்டர் ரகசிய குறியீடுகள் அடிப்படையில், ஒரு ரகசிய வாக்கியத்தை, இவான் கிளார்க் உருவாக்கியிருந்தார்.
அந்த வாக்கியத்தை கண்டுபிடிக்கும் போட்டியை, அவர் அறிவித்திருந்தார். 'வலுவானவற்றை எதிர்க்கவும்' என பொருள்படும், 'டேர் மைட்டி திங்க்ஸ்' என்ற ஆங்கில வாக்கியத்தை, அவர், அந்த பாராசூட்டில் இடம்பெற செய்திருந்தார்.முன்னாள் அதிபர், தியோடர் ரூஸ்வெல்ட் உருவாக்கியது இந்த வாக்கியம். 'இந்த ரகசிய வாக்கியத்தை, பலர், உடனடியாக கண்டுபிடித்து விட்டனர். அடுத்த முறை, இன்னும் நான், அதிகம் யோசிக்க வேண்டும்' என, இவான் கிளார்க் கூறியுள்ளார்.
நெருங்கியது சீன விண்கலம்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, 'தியான்வென் -1' என்ற விண்கலத்தை, சீனா அனுப்பியுள்ளது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் வெளிவட்ட பாதையை அடைந்து உள்ளது. அடுத்த மூன்று மாதங்கள், இந்த விண்கலம், செவ்வாயை சுற்றி வந்து, ஆய்வு செய்யும். அதன்பின், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும், 'ரோவர்' என்ற ஆய்வு வாகனம், செவ்வாயின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட உள்ளது.