வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் - ஆய்வில் வெளியான தகவல்
19 Jan,2021
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் குறித்த அறிவிப்பு அதன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது. பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் என பல்வேறு செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வாட்ஸ்அப் பயனர்களில் வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்தியா முழுக்க 244 மாவட்டங்களில் சுமார் 24 ஆயிரம் பேரிடம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி மாற்றம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் சுமார் 18 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புவதாகவும், தங்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தனர். 26 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்து மற்ற செயலிகளை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் சேவைக்கு போட்டியாக விளங்கும் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளின் பயனர் எண்ணிக்கை ஜனவரி 6 முதல் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் மட்டும் 40 லட்சம் வரை அதிகரித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் டவுன்லோட் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்து உள்ளது.